திருச்சி மாவட்டம்,  திருவானைக்காவல், அருள்மிகு பஞ்சமுகேஸ்வரர் ஆலயம்.

 

விச்ரவஸுக்கு ராவணன் என்றும் குபேரன் என்றும் இரு புத்திரர்கள். இருவரின் தாயும் வெவ்வேறானவர்கள்.

மாற்றாந்தாய் மகன்களான இருவருக்கும் ஆரம்பம் முதலே பகை உண்டாகி, போகப் போக அந்தப் பகை பெரும் யுத்தம் புரியும் அளவிற்கு வளர்ந்தது.

போரில் குபேரனின் அனைத்து ஐஸ்வரியங்களும் புஷ்பக விமானமும் ராவணனால் அபகரிக்கப்பட்டன. மனம் உடைந்த குபேரன், மகாதேவரை ஆராதிக்க, அப்போது ஓர் அசரீரி ஒலித்தது.

மகாவிஷ்ணு, தசரதன் என்ற அரசனுக்கு மகனாகப் பிறந்த ராவணனை யுத்தத்தில் வீழ்த்துவார். அப்போது, உன்னிடமிருந்து பறிபோன புஷ்பகவிமானமும் உனது செல்வமும் உன்னை அடையும் என்றது அக்குரல்.

பின் குபேரன் காவிரியின் தென் கரையில் ஓர் ஆலயம் அமைத்து இறைவனை பிரதிஷ்டை செய்து ராஜ ராஜேஸ்வரர் என்ற பெயரிட்டு ஆராதிக்கத் தொடங்கினான்.

முடிவில் இறைவன் அருளால், அவரது வாக்குப்படியே இழந்த தன் பெருமைகளையும் பொருளையும் மீண்டும் பெற்றான்.

சிவலிங்கத்தின் நான்கு புறமும் முகங்கள் இருக்க, லிங்கமும் ஒரு முகமாகக் கணக்கிடப்பட்டு பஞ்சமுகமாக காட்சியளிக்கிறார். ஆவுடையின்கீழ் தாமரை பீடம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

நான்கு திசைகளையும் நோக்கும்படி முகங்கள் அமைந்திருப்பதால், எத்திசையில் இருப்போரையும் இறைவன் காப்பாற்றுவார் என மக்கள் நம்புகின்றனர்.

திருவிழா:

மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிஷேகம், ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம்.

தல சிறப்பு:

கருவறையில் கிழக்கு திசை நோக்கி ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்க உருவில் அருள்பாலிக்கிறார் பஞ்சமுகேஸ்வரர்.

சிவலிங்கத்தின் நான்கு புறமும் முகங்கள் இருக்க, லிங்கமும் ஒரு முகமாகக் கணக்கிடப்பட்டு பஞ்சமுகமாக காட்சியளிக்கிறார். ஆவுடையின்கீழ் தாமரை பீடம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நான்கு திசைகளையும் நோக்கும்படி முகங்கள் அமைந்திருப்பதால், எத்திசையில் இருப்போரையும் இறைவன் காப்பாற்றுவார் என மக்கள் நம்புகின்றனர்.

பொது தகவல்:

தட்சிணாமூர்த்தி, மகா கணபதி வள்ளி, தெய்வானையுடன் முருகன், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், காலபைரவர் சன்னதிகள் உள்ளன.

பிரார்த்தனை:

இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் தரிசிப்பதால் விரைவில் திருமணம் கைகூடும் என்பதும், செல்வ வளம் பெருகும், உடல் நலம் சிறக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும், அம்மனுக்கும் புது வஸ்திரம் அணிவித்து,அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

இறைவனுக்கு நேர் எதிரே தனி சன்னிதியில் இறைவி திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள். அம்மன் தனது மேல் இரண்டு கரங்களில் சங்குகளை சுமந்தபடியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, ஹஸ்த முத்திரையுடனும் காட்சி தருகிறாள்.

இறைவனும் இறைவியும் எதிர் எதிர் சன்னிதிகளில் அருள் பாலிப்பதால் இருவரையும் நாம் ஒரு சேர தரிசிக்கமுடியும். இந்த அமைப்பு அபூர்வமானது.

இப்படி தரிசிப்பதால் மணப்பேறு கைகூடும். மங்களங்கள் சேரும் என்கிறார்கள். இறைவன் பஞ்சமுகேஸ்வரருக்கும், அன்னை திரிபுரசுந்தரிக்கும் கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

இறைவனையும் இறைவியையும் தரிசித்த பின், ஆலயத்தின் பிரதான இறைவனான ராஜ ராஜேஸ்வரர் காட்சியளிக்கிறார்.

எதிரே நந்தியும், பலிபீடமும் இருக்க அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் ராஜ ராஜேசுவரர் லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கிறார்.

இவரை வழிபட்டால் குறைவற்ற செல்வ வளம் பெருகும் என்கிறார்கள். அதற்குக் காரணம், குபேரனால் வழிபடப்பட்ட அந்த ராஜராஜேஸ்வரர் இவரே என்பதால்தான் இவரை வழிபட்டால் செல்வ வளமும் உடல் நலமும் சிறக்கும் என்கிறார்கள்.

அதோடு, கைவிட்டுப்போன பொருளும் திரும்பக் கிட்டுமாம். கிழக்குப் பிராகாரத்தில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமிகளில் விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெறுகின்றன.

லிங்க வடிவிலான சதுஸ்- சஷ்டி கலேஸ்வரரின் திருமேனியும், அவர் அருகே சதுஸ் சஷ்டி லேஸ்வரியின் திருமேனியும் அருள்பாலிக்கின்றன. அது என்ன சதுஸ் சஷ்டி ? அறுபத்து நான்கு என்பதைத்தான் வடமொழியில் அப்படி சொல்கிறார்கள்.

அறுபத்தி நான்கு லிங்கங்கள் சேர்ந்த ஒரே லிங்க வடிவம் ! தாமரை வடிவ பீடத்தில் எண்கோண வடிவ ஆவுடையில் லிங்க பாணம் அமைந்துள்ளது. பாணம் முழுவதும் உள்ள 64 வரிக்கோடுகளை முகங்களாகக் கணக்கிடப்பட்டு மகா சதாசிவ மூர்ததி, அஷ்டாஷ்ட லிங்கமூர்த்தி என வழிபடுகின்றனர் பக்தர்கள்.

இறைவனின் பின்புறம் நான்கு வேதங்களும், சாளக்கிராமம் வடிவில் அமைந்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஐந்தெழுத்து நாதனின் வடிவங்களுள் மிகச் சிறப்பாகப் போற்றப்படுவது சதாசிவமூர்த்தம். ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம் சத்யோஜாதம் எனும் ஐந்து முகங்கள் கொண்ட திருவடிவம் இது.

அதோமுகம் எனும் மேல்நோக்கிய ஆறாவது முகமும் இதில் சூட்சும வடிவில் உண்டு, என்றாலும் ஐந்து முகங்களே காணமுடியும். குபேரனின் துயர் தீர்த்த இத்தலத்து இறைவன் ராஜராஜேஸ்வரர் தன்னை நாடி வரும் பக்தர்களின் துயரையும் தீர்ப்பார் என பக்தர்கள் நம்புவது நிஜம்!