திருச்சி மாவட்டம் , திருவாசி, அருள்மிகு மாற்றுரைவரதர் ஆலயம்

முன்னொரு காலத்தில் இப்பகுதி மழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இப்பகுதியை கொல்லிமழவன் எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். மன்னனின் மகள் தீராத கொடிய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாள். மன்னன் எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை. எனவே, அவளை இக்கோயிலில் கிடத்திவிட்டு, அவளது பிணியை குணப்படுத்தும் பொறுப்பை சுவாமியிடம் விட்டுவிட்டு சென்று விட்டான்.

அச்சமயத்தில் திருத்தலயாத்திரையாக திருஞானசம்பந்தர் இத்தலம் வந்தார். அவர் சுவாமியின் முன்பு கிடந்த பெண்ணைக் கண்டார்.  அந்நேரத்தில் சம்பந்தர் வந்திருப்பதை அறிந்த மன்னன் கோயிலுக்கு வந்தான்.  திருஞானசம்பந்தரிடம் மன்னன், தன் மகளின் நோயைக் கூறி அவள் குணமடைய வழி சொல்லும்படி கேட்டுக்கொண்டான்.மன்னனின் நிலையை அறிந்த சம்பந்தர் நடராஜரைக் குறித்து பதிகம் பாடினார். அவரது பாடல் கேட்ட நடராஜர் ஆனந்த நடனம் ஆடினார்.

மன்னன் மகளை பிடித்திருந்த நோயை முயலக உருவாக்கி அவனை அழித்து நாகத்தின் மீது ஆடினார். மன்னன் மகள் குணமாகி எழுந்தாள். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள நடராஜர் தலையில் சேர்த்துக் கட்டிய சடைமுடியுடன், ஒரு காலை நாகத்தின் மீது ஊன்றி ஆடும் கோலத்தில் இருக்கிறார். இவரை “சர்ப்ப நடராஜர்’ என்கின்றனர். நடராஜரின் இந்த தரிசனம் அபூர்வமானதாகும்.

அம்பாள் சிறப்பு:

அம்பாள் பாலாம்பிகை, இத்தலத்தில் கமலன் எனும் வணிகனின் மகளாக பிறந்தாள். வன்னிமரத்தின் அடியில் சுவாமியை வேண்டி தவம் இருந்து தகுந்த காலத்தில் அவரை மணந்து கொண்டாள். இவள் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில், மேற்கு பார்த்தபடி இருக்கிறாள்.

இவளது சன்னதியில் வித்தியாசமாக துவாரபாலகிகளுக்கு பெண்கள் மஞ்சள் கயிறு, தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். இவர்கள் மூலமாக அம்பாள் பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறாள் என்பது நம்பிக்கை.

அர்த்தஜாம பூஜையில் மட்டும் முதலில் அம்பாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதன்பிறகு சுவாமிக்கு பூஜைகள் நடக்கிறது. குழந்தை பிறந்தவர்களும், பாலதோஷம் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களும் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைகள் வாழ்வில் நோய்கள் இன்றி சிறப்பாக வாழ்வர் என்பது நம்பிக்கை.

திருவிழா:

வைகாசியில் 11 நாட்கள் பிரம்மோற்ஸவம், திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், தைப்பூசம்.

பொது தகவல்:

பாலாம்பிகை சன்னதிக்கு எதிரே செல்வ விநாயகர் சன்னதியும், அன்னமாம்பொய்கை தீர்த்தமும் இருக்கிறது. இத்தலத்தின் தலவிநாயகரின் திருநாமம் அனுக்கை விநாயகர்.

பிரார்த்தனை:

சுவாமிக்கு இலுப்பை எண்ணெய் விளக்கு போட்டு வழிபட்டால் குடும்பம் சிறக்கும், தோஷங்கள் நீங்கும், அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வலிப்பு, தீராத வயிற்றுவலி, வாதம், ஆஸ்துமா போன்ற நோய்கள் உள்ளவர்கள் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வன்னி இலை அர்ச்சனை செய்து வழிபடுசிறப்பம்சம்:

அமைவிடம்:

திருச்சியில் இருந்து சேலம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் செல்கிறது.