கொரோனா விவகாரம்.. பதறவே பதறாத பக்குவமான பழங்குடி மக்கள்…

“முன்னேல்லாம் ஒரு சில நாட்கள் காட்டுக்குள்ள போயிட்டு வருவோம்.  ஆனா இப்போ எங்க எல்லா குடும்பங்களும் காட்லயே தங்க முடிவு செஞ்சு இங்கேயே வந்துட்டோம்.  ஊருக்குள்ள போறதுக்கு எந்த வண்டி வசதியும் இல்ல. அதால இன்னும் கொஞ்ச நாள் காட்லயே தங்கிடலாம்னு முடிவு செஞ்சிட்டோம்” என்கிறார் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த ரவி.  இவரும் இவரின் குடும்பத்தினரும் தங்களது வாழ்விடத்திலிருந்து கொஞ்சம் துணிமணிகள், பாத்திரங்களுடன் 5 கி.மீ. வரை புலிகள் காப்பக வனத்திற்குள் உள் சென்று குகைகளில் வாழ்ந்து வருகின்றனர்.

கதர் என்னும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது உணவு தேவைகளை முன்னிட்டு காடுகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.  பெரும்பாலும் இவர்கள் காடுகளில் கிடைக்கும் தேன் மற்றும் உணவுப் பொருட்களைச் சேர்த்து அருகில் உள்ள ஊர்களில் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தவர்கள்.  ஆனால் இந்த கொரோனா ஊரடங்கு இவர்களைக் கட்டி போட்டுவிட்டதால் இவர்கள் அனைவரும் இப்போது தங்களது முன்னோர்களின் வழிகளைப் பின்பற்றி தங்களது நாட்களைக் கடத்த முடிவு செய்து இன்று காடுகளில் குகைகளைத் தேடித் தஞ்சமடைந்துள்ளனர்.

காலை வேளைகளில் அருகில் உள்ள ஆறுகளில் கிடைக்கும் மீன்கள் தான் இவர்களின் பிரேக்ஃபாஸ்ட்.  தொடர்ந்து காடுகளுக்குள் சென்று அடுத்த வேளைகளுக்காகப் பழங்கள், காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளைச் சேகரித்துக் கொண்டு மீண்டும் குகைகளுக்குத் திரும்புகின்றனர்.  மாலை வேளைகளில் கேம்ப் ஃபயர் போல நெருப்புகளை மூட்டிச் சுற்றி அமர்ந்து அவரவர்களின் அன்றைய அனுபவங்களை சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொள்கின்றனர்.  ஒவ்வொரு குழுவும் காட்டுக்குள் ஒவ்வோர் பகுதிக்குச் சென்று தங்களின் தேவைகளைத் தேடி அடைகின்றனர்.

கிட்டத்தட்ட 900 குடும்பங்கள் ஆனைமலை புலிகள் காப்பக காடுகளின் அருகிலே வாழ்ந்து வருகின்றனர்.  அரசின் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட கள்ளார், குமாதி, எருமைப்பாறை, கீழப்பூஞ்சி மற்றும் நாசரூத்து ஆகிய பகுதிகளில் வசிக்கும் இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவிகளை வழங்கி வந்தாலும் இந்த நெருக்கடி காலகட்டத்தினை தங்களின் பிள்ளைகளுக்கு அவர்களின் பண்டைய வாழ்க்கை முறையை, இயற்கையுடன் இசைந்து வாழ்வதின் பலன்களை, வில், ஈட்டி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தும் முறைகளைக் கற்றுத்தருவதற்குப் பயன்படுத்திக் கொள்வதாகச் சொல்கின்றர்.

“எங்க புள்ளைங்க எல்லாரும் பள்ளிக்கூடம் போறாங்க தான்.  ஆனாலும் எங்க கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கத்துக்க வேண்டியதும் அவசியம் தானே” என்கிறார் ராஜேஸ்வரி.

கல்லாறு பகுதியின் பெரும்பாலான பழங்குடியினர் விவசாயிகள் தான்.  மிளகு போன்றவற்றைப் பயிரிட்டு வரும் இவர்கள் தினமும் காட்டுக்குள் செல்வது வழக்கம் தான் என்றாலும் மாலையில் வீடு திரும்பி விடுவார்கள்.  ஆனால் இந்த ஊரடங்கு இவர்களை பழையபடியும் தங்களின் முன்னோர்களின் வாழ்க்கை முறைக்கே இட்டுச் சென்று காடுகளில் குகைகளிலேயே தங்கிவிடச் செய்திருக்கிறது.

-லட்சுமி பிரியா