கோயம்புத்தூர்

மலைப்பகுதியில் நிலங்களை ஆக்கிரமித்துள்ள ஈஷா அமைப்பை எதிர்க்கும் கூட்டத்தில் முத்தம்மாள் என்னும் ஆதிவாசிப் பெண் தலைமை தாங்கி நடத்தி உள்ளார்.

பிரதமருடன் ஈஷா மையத் தலவர்

ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் என்னும் அமைப்பு கோவையை அடுத்த வெள்ளியங்கிரி பகுதியில் பல ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி வருகிறது.  இவற்றில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடங்களும் அடங்கும்.  இந்த இடம் மட்டும் சுமார் 44 ஏக்கர்கள் ஆகும்.  இதை ஈஷா மையத்திடம் இருந்து மீட்டு நிலம் இல்லாத பழங்குடியினர் மற்றும் தலித் மக்களுக்கு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது.

கடந்த ஞாயிறு அன்று இது குறித்து சிறப்பு மக்கள் கூட்டம் ஒன்று முட்டத்து வயலில் குளத்தேரி பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஆதிவாசிப் பெண் முத்தம்மாள் என்பவர் தலைமை தாங்கினார்.

முத்தம்மாள் இந்தக் கூட்டத்தில் உரையாற்றுகையில், “எங்களைப் போல் மலைவாழ் மக்களை இந்த ஈஷா மையம் அச்சுறுத்தி வருகிறது.  எங்களுக்கு ஆதரவாக செயல்படும் சமூக ஆர்வலர் சிவா மீது பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவரை மிரட்டி பொய் வழக்கு போட வைத்துள்ளது. எங்கள் நிலத்தை மீட்கும் வரை எமது போராட்டங்கள் நிற்காமல் தொடரும்.  இந்த நிலத்தை அடைவதன் மூலம் பலரது வாழ்வாதாரம் பாதிக்காமல் காப்பாற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.

சுமார் ஐம்பது வயதான முத்தம்மாள் தனது கணவர் மற்றும் இருகுழந்தைகளுடன் ஈஷா மையம் அருகே வசித்து வருபவர்.  இவர் சுய உதவிக் குழுவின் மூலம் காட்டில் கிடைக்கும் மூலிகைகள், நெல்லிக்காய், சீயக்காய், வடுமாங்காய் ஆகியவைகளை எடுத்து வந்து விற்பனை செய்து வந்தார்.  அரசு அவைகளை எடுத்து வர டெண்டர் விட்டதால் இவரைப் போன்ற சாதாரண மக்களுக்கு அந்த வேலை வாய்ப்பு பறி போனது.  அந்த இடத்தில் ஈஷா மையம் கட்டிடங்கள் கட்டி மின்வேலி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சண்முகம், “ஈஷா யோகா மையம் அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டி உள்ளது.  இதை வருவாய்த் துறை அதிகாரிகள் தடுக்கவில்லை.  இதனால் ஈஷா மையத்துக்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என சந்தேகம் எழுகிறது.  ஏற்கனவே நிலம் வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் மனு அளித்துள்ளனர்.  அரசு உடனடியாக இந்த 44 ஏக்கர் நிலத்தை மீட்டு அவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்.  அப்படி இல்லை எனில் வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் அந்த இடத்தை கைப்பற்றும் போராட்டத்தை நடத்தி, அங்கு விவசாயம் செய்வோம்” என தெரிவித்துள்ளார்.