கோவை: கோவையில் கொரோனா தொற்றுக்கு பிந்தைய கவனிப்புக்கான தனிப்பிரிவை ஆட்சியர் ராசாமணி திறந்து வைத்து பார்வையிட்டார்.
கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு பிந்தைய கவனிப்புக்கான தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தனிப்பிரிவை ஆட்சியர் ராசாமணி ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இஎஸ்ஐ மருத்துவமனையில் கோவை மட்டுமல்லாது திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கும் சிகிச்சை தரப்படுகிறது. 650 படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது.
இதுவரை 9,500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். அவர்களில் சிலருக்கு மூச்சுத் திணறல், உடல் வலி, உடல் சோர்வு, தூக்கமின்மை, காய்ச்சல், தொடர் இருமல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
அதற்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக தனி வெளிநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குப்பின் பாதிப்புகள் ஏற்படாத வகையில் நெஞ்சக நோய் துறை மருத்துவர்கள், மனநல மருத்துவர், இயன்முறை மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் இந்த சிறப்பு பிரிவில் சிகிச்சை அளிப்பார்கள்.
இந்தப் பிரிவு காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, உதரவிதான சுவாசப் பயிற்சி உள்ளிட்ட சுவாசத்தை மேம்படுத்தும் பயிற்சிகள், சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படும் என்று கூறினார்.