பெங்களூரு:
இந்திய இறையாண்மைக்கு எதிராக கோஷமிட்டதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் இயக்கம் அம்னெஸ்டி இன்டர்நேஷன அமைப்பு. மனித உரிமைகளை பற்றி உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது அதன் பணியாகும்.
அம்னஸ்டி நிறுவனம் கடந்த 13 ம் தேதி காஷ்மீர் விவகாரம் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை தனியார் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்தது. அதில் பங்கேற்ற சிலர் இந்தியாவுக்கு எதிராகவும், காஷ்மீரில் உள்ள ராணுவத்தினரை எதிர்த்தும் கோஷம் எழுப்பியதாக தெரிகிறது. கருத்தரங்கில் காஷ்மீர் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் பேசிய மாணவர் ஒருவர் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பேசினார். அப்போது காஷ்மீரை சேர்ந்த சிலர் இந்திய ராணுவம் மற்றும் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினை கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி கருத்து தெரிவித்த முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டிய விவகாரம். தேச விரோத சக்திகளின் செயல்பாட்டிற்கு கர்நாடகத்தில் இடமில்லை என்றார்.
இதுபற்றிய புகாரையடுத்து, கூட்டத்தை நடத்திய நிர்வாகிகள் மீது தேசத் துரோக சட்டப் பிரிவு 124 ஏ, 142, 143, 152 ஏ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் பெங்களூரு ஜெ.சி. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அன்றைய நிகழ்ச்சி பற்றிய வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும், அவற்றை ஆராய்ந்த பின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.