சென்னை: செப்டம்பர் 27ம் தேதி துவங்கவுள்ள ஆன்லைன் முறையிலான டிஆர்பி தேர்வில், எந்தவித முறைகேடுகளும் நிகழாத வகையில் மிகவும் கவனமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
மொத்தமுள்ள 2144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டி போடவுள்ளோரின் எண்ணிக்கை 185463. செப்டம்பர் 27 முதல் 29 வரை நடைபெறும் இந்த ஆன்லைன் தேர்வு மாநிலமெங்கும் மொத்தம் 154 மையங்களில் நடைபெறவுள்ளது. டிஆர்பி தேர்வு முதன்முறையாக ஆன்லைன் முறையில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
தேர்வர்களின் பதில்கள் கசியாமல் ரகசியமாக வைக்கப்படும் வகையில், டிஎல்பி எனப்படும் தரவு கசிவு தடுப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களிலுள்ள 883 கணினி ஆய்வகங்களை சோதனையிட்டுள்ள அதிகாரிகள், ஒவ்வொரு கணினியையும் தேர்வு சர்வருடன் இணைத்துள்ளனர்.
இந்த சர்வரில் அங்கீகரிக்கப்படாத எந்த சாதனத்தையும் நுழைக்க முடியாது. யாரேனும் அப்படி இணைக்க முயற்சித்தால் டிஎல்பி அமைப்பு எச்சரிக்கை செய்துவிடும். ஒவ்வொரு கேள்வித் தாளிலும், வெவ்வேறு எண்களில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.
கடந்த 2017ம் ஆண்டு நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வில் மோசடிகள் கண்டறியப்பட்ட பிறகு, பேப்பர் – பேனா அடிப்படையிலான தேர்வுகளை நடத்துவதில்லை என்று டிஆர்பி முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.