டெல்லி: இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார். இதைத்தொடர்ந்து இருவரும் ஒரே காரில் பயணித்தனர். ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் நேற்றிரவு சிறப்பு விருந்து அளித்தார்.
டெல்லியில் 23-வது இந்திய, ரஷ்ய உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று மாலை 6.35 மணிக்கு டெல்லிக்கு வந்தார். டெல்லி பாலம் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவரை நேரில் வரவேற்றார். ஆரத் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.
இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புதின், வழக்கமாக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த தனது Aurus Senat காரை பயன்படுத்துவதற்கு பதில், பிரதமர் மோடியுடன் ஃபார்ச்சூனர் காரில் பயணம் செய்தது கவனம் பெற்றுள்ளது. ஜப்பான் தயாரிப்பு காரான டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் இருவரும் பிரதமர் அலுவலகம் வரை பயணம் செய்தனர். பின்னர் நிகழ்ச்சியில், புதினுக்கு பிரதமர் மோடி ரஷிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பகவத்கீதையை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து இன்று காலை 11மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு ராணுவ அணி வகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன்பிறகு மகாத்மா காந்தி நினைவிடத்தில் அதிபர் புதின் அஞ்சலி செலுத்துகிறார்.
இதன் பிறகு டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் புதினும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது பாதுகாப்பு, அணு சக்தி, தொழில்நுட்பம், வர்த்தகம், விண்வெளி உள்ளிட்ட துறைகள் தொடர்பாக இரு நாடுகள் இடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான சுகோய் எஸ்யு57 போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா, ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி ரஷ்யாவிடம் இருந்து 54 சுகோய் எஸ்யு போர் விமானங்கள் வாங்கப்படலாம்.
இந்தியாவின் சென்னை மற்றும் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரங்களுக்கு இடையே புதிய கடல் வழித்தடத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதேபோல ஈரானின் சபஹார் துறைமுகம் வழியிலான வடக்கு – தெற்கு வழித்தடத்தை (ஐஎன்எஸ்சிடி) உருவாக்குவது தொடர்பாகவும் பிரதமர் மோடி, அதிபர் புதின் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்திய, ரஷ்ய உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இரு நாடுகளின் தொழிலதிபர்கள் பங்கேற்கும் கூட்டம் டெல்லி பாரத் மண்டபத்தில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் விளாடிமிர் புதினும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். இதில் இரு நாடுகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட தொழிலதிபர் கள் பங்கேற்க உள்ளனர்.
ரஷ்ய உச்சி மாநாட்டின் ஒரு பகுதியா ரஷ்ய அதிபர் புதினுடன் வந்த ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோவ் டெல்லி வந்தார். அவர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார். சுகோய் எஸ்யு 57 ரக போர் விமான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக இரு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரி உட்பட 7 ரஷ்ய அமைச்சர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். ரஷ்யாவின் மத்திய வங்கியின் கவர்னர் எல்விராவும் டெல்லிக்கு வந்துள்ளார். வரும் 2030-ம் ஆண்டில் இந்தியா, ரஷ்யா இடையிலான வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறும்போது, “சென்னை – விளாடிவோஸ்டாக் தடம், ஐஎன்எஸ்சிடி வழித்தடம், சுகோய் எஸ்யு 57 போர் விமானம் ஆகியவை குறித்து பிரதமர் மோடி, அதிபர் புதின் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார்கள். உக்ரைன் போர் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள்” என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்துக்குப் பிறகு இன்று இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சார்பில் அதிபர் புதினுக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு அதிபர் புதின் டெல்லியில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் புறப்படுகிறார்.
புதிதான் சுமார் 30 மணி நேரம் அவர் இந்தியாவில் தங்கியிருப்பார் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷிய அதிபர் புதினுக்கு பகவத் கீதை பரிசளித்துள்ளதை தனது எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள பிரிதமர் மோடி, ரஷ்ய மொழியில் கீதையின் பிரதியை அதிபர் புடினுக்கு வழங்கினார். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.
இதுவரை 7 தலைவர்களுக்கு நேரில் வரவேற்பு:
வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போது விமான நிலையத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் அவர்களை வரவேற்பது வழக்கம். மிக முக்கிய தலைவர்களை மட்டும் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவேற்பார்.
கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்தபோது பிரதமர் மோடி நேரில் வரவேற்றார். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரை பிரதமர் மோடி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.
கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நயான், கடந்த பிப்ரவரியில் கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி ஆகியோர் இந்தியாவுக்கு வந்தபோது பிரதமர் மோடி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்பு அளித்தார்.
தற்போது 7-வது உலகத் தலைவராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் மோடி மரபுகளை உடைத்து டெல்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்று உள்ளார்.