சென்னை
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே வெளிநாடு பயணம் மேற்கொள்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு பதில் கூறினார். மேலும், ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்வதன் மர்மம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழக முதல்வர் எடப்பபாடி பழனிச்சாமி இன்று காலை விமானம் மூலம் சக அமைச்சர்கள் சிலர் மற்றும் அதிகாரிகளுடன் லண்டன் பயணமானார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,, ’’என்னை விமர்சிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், அடிக்கடி வெளிநாடு செல்கிறார். அதை யாரும் கேள்வி எழுப்புவதில்லை என்று கூறியவர், நான் எனது சொந்தக் காரணங்களுக்காக வெளிநாடு செல்வதாகச் ஸ்டாலின் சொல்கிறார், அது என்ன சொந்தக் காரணம்? என்று கோபமாக கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்கிறாரே? அது என்ன மர்மம்? ஏன் அதுகுறித்து இதுவரை அவர் வாய் திறக்கவில்லை என்று விமர்சித்தவர், தான் வெளிநாடு செல்வதை எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்துகின்றன என்று ஆதங்கப்பட்டார்.
தொழிலதிபர்களிடம் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே வெளிநாடு செல்கிறேன் என்ற எடப்பாடி,. நான் பெரிய தொழிலதிபர் கிடையாது. ஒரு சாதாரண விவசாயி என்றும், தமிழகத்துக்கு புதிய தொழிற்சாலைகள் வரவேண்டும். அதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக வேண்டும். அதனால் பொருளாதாரம் உயர வேண்டும், அதுதான் எங்களின் லட்சியம். அதற்காகத்தான் வெளிநாடு சுற்றுப்பயணத்தை அமைத்துள்ளேன்’’ என்று விளக்கம் அளித்தார்.
முதல்வருடன் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்த வெளிநாட்டுப் பயணத்தின்போது சுகாதாரத்துறையில் தமிழகத்தை முன்னேற்றுவதற்காக மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருப்பதாக தெரிவித்தார்.
ஏற்கனவே செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், எடப்பாடி யாருக்கு முதலீடு சேர்க்க வெளிநாடு செல்கிறார் என்று கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.