சென்னை,

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்னும் 4 நாட்களுக்குள் ஓய்வூதிய தொகை முழுவதும் வழங்கப்படும் என்று உயர்நீதி மன்றத்தில் அரசு சார்பாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய நிலுவை தொகை, ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கடந்த 7 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்து இயக்கம் முடங்கி உள்ளது. பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பிய உயர்நீதி மன்றம், ஓய்வூதிய நிலுவைத் தொகை தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நீதிபதி மணிக்குமார் அமர்வுக்கு  கடந்த 8ம் தேதி மாற்றம் செய்தது.

இந்த வழக்கு இன்று  சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில், இன்னும்  4 நாட்களுக்குள் போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியத் தொகை முழுவதும் வழங்கப்படும்  என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பாரத ஸ்டேட் வங்கியிடம் ரூ.750 கோடி கடன் வாங்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.