
சென்னை
வேலை நிறுத்தத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு வரவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
தமிழ் நாடு முழ்வதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு அரசு ஒப்புதல் அளிக்காததை ஒட்டி இந்த திடீர் வேலை நிறுத்தத்தில் அவர்கள் ஈடு பட்டனர். பல இடங்களில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப் பட்டதால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதித்தது. மேலும் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் தொழிற்சங்கத்தினர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வேலை நிறுத்தத்தை தொடரப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த தடையை சட்டபூர்வமாக எதிர் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மற்ற அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். மற்ற அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கி வருகிறோம். போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்குகிறோம்.
தற்போதுள்ள கடுமையான நிதி நெருக்கடியிலும் 2.44 மடங்கு ஊதிய உயர்வு வழங்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. ஒரு சில சங்கங்கள் மட்டும் கையெழுத்து இடவில்லை. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய பேச்சு வார்த்தை இரவு 10 மணிக்கு முடிந்தது. ஆனால் ஊழியர்கள் மாலை 3 மணியில் இருந்தே போராட்டத்தை தொடங்கி உள்ளனர். சில இடங்களில் பேருந்துகளை அப்படி அப்படியே சாலையில் விட்டு விட்டு சென்றுள்ளனர். இதனால் பெண்களும் குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றம் ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டட்தை தடை செய்துள்ளது. எனவே தொழிலாளர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும். இல்லை எனில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி வாகனங்களை அப்படியே விட்டு சென்ற ஊழியர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]