சென்னை: ஊதிய ஒப்பந்த பிரச்சினை தொடர்பாக போராடப்போவதாக அறிவித்துள்ள  போக்குவரத்து ஊழியா்களை பேச்சு வார்த்தைக்கு  வருமாறு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 13ந்தேதி மற்றும் 14ந்தேதி ஆகிய இரு நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஊதிய திருத்த பேச்சுவார்த்தைகள் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர்  சிவசங்கர்  பிப்ரவரி 13, 14 தேதிகளில் தொழிற்சங்கத் தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.

நிறுவனங்களுக்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையிலான முந்தைய ஊதிய ஒப்பந்தம் செப்டம்பர் 1, 2023 அன்று காலாவதியானதால், அடுத்த ஒப்பந்தத்திற் கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதில் அதிகப்படியான தாமதம் ஏற்பட்டுள்ளது, இது போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாரிசு வேலை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  ஜனவரி 25ந்தேதி அன்று  தமிழ்நாடு முழுவதும்  சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தினர். மேலும், இந்த போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தனர்.

இந்த நிலையில், அரசு போக்குவரத்து ஊழியா்களை தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளது.  அரசு போக்குவரத்து ஊழியா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்தம்குறித்து பேச உள்ளதாகவும், இந்த பேச்சுவார்த்தை பிப். 13, 14-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், இதில் பங்கேற்க தொழிற்சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் சுமாா் 1.11 லட்சம் பணியாளா்களுக்கான ஊதிய உயாா்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த வகையில் 13-ஆவது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019 ஆக. 31-ஆம் தேதியுடன் காலாவதியான நிலையில், பல்வேறு காரணங்களால் 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் தாமதம் ஏற்பட்டு, 2022 ஆகஸ்ட் மாதத்தில் பேச்சுவாா்த்தை நடத்தி இறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில்,14-ஆவது ஊதிய ஒப்பந்தமும் 2023 ஆகஸ்ட் மாதத்துடன் காலாவதியான நிலையில், 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை விரைந்து நடத்த வேண்டும் என தொடா்ச்சியாக தொழிற்சங்கங்கள் கோரிக்கை எழுப்பி வந்தன. இதன் தொடா்ச்சியாக ஓராண்டு தாமதமாக கடந்தாண்டு ஆக. 27-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையிலுள்ள மாநகா் போக்குவரத்துக்கழகப் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற 15-ஆவது பேச்சுவாா்த்தை அறிமுகக் கூட்டமாகவே நடைபெற்றது. இக்கூட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பங்கேற்பதால், டிச.27, 28 ஆகிய இரண்டு நாள்களும் பேச்சுவாா்த்தை நடத்த அரசு திட்டமிட்டது. ஆனால், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவு காரணத்தால் பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை பிப்.13,14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, வியாழன், வெள்ளிக்கிழமை (பிப்.13,14) குரோம்பேட்டையிலுள்ள மாநகா் போக்குவரத்துக்கழகத்தின் பயிற்சிமைய வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த பேச்சுவாா்த்தையில் பங்கேற்க தமிழகஅரசு சாா்பில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும், 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வாா்த்தைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, ஒரு தொழிற்சங்கம் சாா்பாக ஒரு பிரதிநிதி மட்டும் கலந்து கொள்ளும்படியும், பிரதிநிதிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை யுடன் வரும்படியும் அக்குழு அழைப்பு விடுத்துள்ளது.