லப்புழா

லப்புழா காவல் நிலையத்தில் ஒரு திருநங்கையின் அரை நிர்வாண வீடியோ எடுக்கப்பட்டு பரப்பியதாக பெண் காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாதம் 22ஆம் தேதி அன்று ஆலப்புழா அருகில் உள்ள இரும்புப் பாலம் என்னும் இடத்தில் திருநங்கை ஒருவர் ஒரு கடையில் ரகளை செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது.   அங்கு விரைந்த பெண் காவலர்கள் அந்த திருநங்கையை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.    மருத்துவ சோதனைக்கு ஒத்துழைக்க அந்த திருநங்கை மறுத்துள்ளார்.

அத்துடன் குடிபோதையில் இருந்த அந்த திருநங்கை திடீரென தனது உடைகளை களைய ஆரம்பித்துள்ளார்.     அப்போது அங்கு வந்த திருநங்கைகள் நீதிக் கழக உறுப்பினர் கீது அந்த திருநங்கையை கண்டித்து உடைகளை அணியச் சொல்லி இருக்கிறார்

அப்போது அந்த திருநங்கையின் அரை நிர்வாணக் கோலம்  வீடியோவாக பதியப்பட்டு வேறொரு திருநங்கை அதை ”ஆலப்புழா காவல்நிலையத்தில் திருநங்கையின் அரை நிர்வாணம்”  என்னும் தலைப்பில் சமூக தளங்களில் பதிந்துள்ளார்.   அந்த வீடியோ பலராலும் பரப்பப்பட்டு வைரலாகியது.

இதை ஒட்டி மாவட்ட காவல் அதிகாரி சுரேந்திரன் விசாரணை நடத்தினார்.   அந்த விசாரணையில் துணை உதவி ஆய்வாளர் ஸ்ரீலதா அந்த வீடியோவை எடுத்ததும்  அவர் அதை மற்றொரு திருநங்கைக்கு அனுப்பி அதை பரப்பச் சொன்னதும் தெரிய வந்துள்ளது.   ஸ்ரீலதாவை பணியிடை நீக்கம் செய்து சுரேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.   இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது