டில்லி

லித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தை உச்சநீதிமன்றம் திருத்தியதை எதிர்த்து தலித் மற்றும் பழங்குடியினரின் பிரதிநிதிகள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்திக்க உள்ளனர்.

தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் உச்சநீதிமன்றம் கடந்த 20ஆம் தேதி திருத்தங்கள் செய்துள்ளது.   இந்த சட்டம் தவறாக உபயோகிக்கப்படுவதாக தொடுக்கப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், “வன் கொடுமை சட்டம் பல நேரங்களில் பழி வாங்க மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.   இதனால் உடனடி கைது என்பது தேவை இல்லை.   முன் விசாரணை செய்யப்பட்டு அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்த பிறகே இந்த புகார்கள் பதியப்படவேண்டும்” என்பது உட்பட பல திருத்தங்களை உச்ச நீதிமன்றம் செய்துள்ளது.

இதனால் இந்த சட்டம் நீர்த்துப் போய்விடும் எனவும் இது தலித் மற்றும் பழங்குடியினருக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.    காங்கிரஸ் கட்சி இந்த வழக்கில் மத்திய அரசு சரியாக வாதிடவில்லை என குற்றம் சாட்டியது.    பஞ்சாப் மாநில சட்டப்பேரவை உள்ளிட்ட சட்டசபைகளில் இதை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையொட்டி தலித் மற்றும் பழங்குடி மக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று இரவு சந்திக்க உள்ளனர்.   அவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் வருமாறு அவர்கள் அழைத்துள்ளனர்.