படத்தில் இருப்பவரின் பெயர் அஞ்சலி லாமா. வயது 32. சமீபத்தில் மும்பையில் ந்த லேக்மே பேஷன் ஷோவில் ஒயிலாக நடந்த இவரதா கம்பீர அழகைக்கண்டு வியந்து ரசிக்காதவர் இல்லை.
சரி, அதற்கென்ன என்கிறீர்களா?
இவர் ஒரு திருநங்கை!
நேபாளத்தில் நியூவாக்காட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பிறந்த போது, ஆண் குழந்தை பிறந்ததாக கொண்டாடினர் பெற்றோர். நபீன் வைபா என்று பெயர் வைத்து மகிழ்ந்தனர்.
ஆனால், பருவ வயதில் இவர் தன்னை உணர்ந்தார் அவருக்குள் இருக்கும் பெண்மை, வெளிப்பட்டது. பெண்ணைப்போல நடந்துகொள்ள ஆரம்பித்தார். பெண்களுக்கான உடைகளை விரும்பி அணிய ஆரம்பித்தார்.
அதுவரை பாசத்தைப் பொழிந்த பெற்றோரும், உற்றார் உறவினரும் இவரைத் தூற்ற ஆரம்பித்தனர். எல்லா திருநங்கைகளுக்கும் ஏற்படும் அவமானங்கள் இவருக்கும் ஏற்பட ஆரம்பித்தன.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் வீ்ட்டைவிட்டு வெளியேறினார். நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு வந்தார். தன்னந்தனியாய் வெளியூர் வந்தால்… அதுவும் திருநங்கை என்றால், எத்தனை துயர், வேதனை!
அனைத்தையும் எதிர்கொண்டார். காத்மாண்டுவில் திருநங்கைகளுக்காக செயல்படும் ப்ளுடைமண்ட் சொசைட்டி என்ற அமைப்பில் சேர்ந்தார். வாழ்க்கை ஓரளவு பாதுகாப்பாக ஆனது.
ஆனாலும் வெளியிடங்களில் தொடர்ந்து புறக்கணிப்புகள், கிண்டல் கேலிகள். அவற்றை மன உறுதியுடன் ஏற்றுக்கொண்டார்.
மாடலிங் மீது இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. திருநங்கையான இவரை மாடலிங் உலகம் அவ்வளவு எளிதில் ஏற்கவில்லை. பெரும் போராட்டத்திற்குப் பிறகு மாடலிங் உலகில் கால் பதித்தார். மெல்ல மெல்ல மாடலிங்கில் முத்திரை பதித்தார்.
இன்று புகழ்பெற்ற மாடலிங் பெண்மணி இவர்!