தாய்லாந்து:
நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடக்கவிருக்கும் திருநங்கையருக்கான சர்வதேச அழகுராணி போட்டியில் இந்தியா சார்பாக மணிப்புரி நடிகையான பிஷேஷ் ஹியூரம் கலந்து கொள்கிறார்.
27 வயதான ஹியூரம் ஆடையலங்கார துறையில் பட்டம் பெற்றவர். மணிப்புரில் நடமாடும் திரையரங்குகளில் நடைபெறும் நிலழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவராவார். இவர் இப்போட்டியில் வெல்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனாலும் இவருக்கு கிடைத்திருக்கும் ஸ்பான்சர்கள் மிக சொற்பமே என்பது வருத்தத்துக்குரியது.
ஆனால் இந்தியாவைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர் இதுபோன்ற போட்டிகளுக்கு தடைகளை உடைத்துச் சென்றதே மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இன்னும் பல நாடுகளில் இவர்கள் அங்கீகரிக்கப்படாத நிலையில் இருக்கும்போது கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் திருநங்கையான வாலண்டைன் டெ ஹிஞ் என்பவர் பாலின மாற்றம் செய்து கொண்டவர்களை அங்கீகரிக்காமல் இருக்கும் நாடுகளின் கொடியை பாவாடையாக அணிந்து நடந்து வந்து தனது எதிர்ப்பைக் காட்டினார்.
இப்போட்டியில் ஹியூரம் வெல்லும் பட்சத்தில் இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர் மீதிருக்கும் தவறான பார்வைகள் சற்றே மாறக்கூடும் என்ற சிறு நம்பிக்கை ஏற்ப்பட்டுள்ளது.