ராமேஸ்வரம்
ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் 11 சரக்கு பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்துள்ளது.
ரூ.545 கோடியில் ராமேஸ்வரம் பாம்பன் கடலில் புதிதாக ரெயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின் இறுதி கட்டப் பணியாக மையப் பகுதியில் உள்ள தூக்கு பாலத்தை முழுமையாக திறந்து மூடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 5 ஆம் தேதி பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் வழியாக ரெயில் எஞ்சினை இயக்கி ரெயில்வே துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
தற்போது பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்தில் முதல் முறையாக 11 பெட்டிகளை கொண்ட சரக்கு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தின்போது 20 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சரக்கு ரயில் என்ஜின் செங்குத்து தூக்கு பாலத்தை கடந்து சென்றதால் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது.
இந்த ரயில் சோதனை நடைபெற்றபோது பாம்பன் ரெயில் நிலையத்தில் இருந்து புதிய ரயில் பாலம் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் பொதுமக்கள் யாரும் நடமாட தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று சோதனை வெற்றிகரமாக முடிந்ததால் விரைவில் பாம்பன் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.