டில்லி,
இனிமேல் நாடு முழுவதும், பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகள் வசதியை முன்னிட்டு தபால் நிலையம் மூலமும் ரெயில் டிக்கெட் பதிவு செய்யும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.
இதற்கான ஒப்பந்தம் இரு துறைகளுக்கு இடையே கையெழுத்தாகி உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி, பயணிகள் இனி தங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை எடுக்க , ரெயில் நிலையம் செல்ல வேண்டியதில்லை. தங்கள் பகுதியில் இருக்கும் தபால் அலுவலகங்களிலேயே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.
தற்போது விரைவு ரெயில் டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமே பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் விசேஷ நாட்களில் டிக்கெட் எடுக்க பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவாகி வருகிறது.
இதை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்களின் வசதிக்காக, தபால் நிலையங்களில் டிக்கெட் பதிவு செய்வது குறித்து, ரெயில்வே துறை இந்திய தபால் துறையுடன் ஒப்பந்தமிட்டுள்ளது.
முதல் கட்டமாக குறிப்பிட்ட நகரங்களில் இது அமல்படுத்தப்பட இருப்பதாகவும், இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற இடங்களிலும் விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் மூலம் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 15 தலைமை தபால் அலுவலகங்களில் ரெயில் டிக்கெட் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.