ஒரு காலத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய, ரயில் நிலையம் சென்று கியூவில் கால்கடுக்க நிற்கவேண்டிய நிலை இருந்தது. பிறகு டிராவல் ஏஜென்சிகள் முளைத்தன.. பணம் கொஞ்சம் அதிகமாக ஆனாலும், வேலை எளிதானது. அடுத்து இன்டர்நெட்டில் பதிவு செய்யும் முறை வந்தது. இது மிக வசதியாக ஆகிவிட்டது. ஆனாலும், சில சமயங்களில் நெட் கனெக்ஷன் கிடைக்காமல் திண்டாட வேண்டிய நிலை.
இனி இந்த கவலை இல்லை. 139 என்ற எண்ணுக்கு உங்கள் போனில் இருந்து மெசேஜ் அனுப்பி டிக்கெட் முன்பதிவு செய்துவிடலாம். வங்கிக் கணக்குடன் செல்போன் எண்ணை இணைத்து இருந்தால், டிக்கெட் கட்டணம் வங்கிக்கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளப்படும்.
இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் சாதாரண செல்போன் வைத்து இருப்பவர்களும், பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற இருப்பவர்களுக்கும் இந்த வசதியை ரயில்வேதுறை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தின்படி, டிக்கெட் முன்பதிவு செய்பவர், எத்தனை பேர் பயணம்செய்ய இருக்கிறார்கள், அவர்களது பெயர், வயது, பயண தேதி, எந்த வகுப்பு டிக்கெட், ரயில் பெயர், ரெயில் எண் ஆகியவற்றை 139 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும்.
உடனடியாக ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து, டிக்கெட் கட்டணத்துக்கான பரிமாற்ற அடையாள எண் அனுப்பிவைக்கப்படும். பிறகு, டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது என்று நமது எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் டிக்கெட் கட்டணத் தொகையும் அனுப்பி வைக்கப்படும்.
அதன்பின் பணப்பரிமாற்ற பாஸ்வேர்டு அனுப்பப்படும் அதை உறுதி செய்தால், கட்டணம் வங்கிக்கணக்கில் இருந்து கழித்துக்கொள்ளப்படும்.
ஆக, ரயில் முன்பதிவு இனி மிக எளிது!
குறிப்பு:
ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இலவசமாக ரூ.10 லட்சத்துக்கான விபத்துக்காப்பீடு வழங்கப்படும் என ரெயில்வே துறை முன்பே அறிவித்துள்ளது. அந்த திட்டம் இதற்கும் பொருந்தும்.
அதே நேரம், இந்த திட்டத்தில் டிக்கெட்முன்பதிவு செய்ய , ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் நாம் பதிவு செய்திருருக்க வேண்டும்.