மும்பை:
மும்பையின் சர்ச்கேட் பகுதிக்கு செல்லும் புறநகர் ரெயில் ஒன்று அங்குள்ள சர்னிரோடு நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்டவாளத்தில் நடந்து சென்றார்.
இதை கவனித்த ரெயில் டிரைவர் எச்சரிக்கை ஒலி எழுப்பினார். இதை அந்த பெண் கவணிக்காமல் தொடர்ந்து நடந்து சென்று கொண்டே இருந்தார்.
சுமார் 70 கி.மீ. வேகத்தில் வந்த ரெயில் சில நொடிகளில் அந்த பெண் மீது மோதிவிடும் நிலை ஏற்பட்டது. இதை உணர்ந்த டிரைவர் பிரேக் போட்டு சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தினார்.
ரெயிலும் அந்த பெண்ணுக்கு மிக அருகில் சென்று நின்றது. இதனால் மயிரிழையில் அந்த பெண் உயிர் தப்பினார். அந்த பெண்ணை நடைமேடையில் இருந்த பயணிகள் மேலே தூக்கிவிட்டனர்.
இந்த சம்பவத்தை பயணி ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரெயில் டிரைவரான சந்தோஷ் குமார் கவுதமை நேரில் அழைத்து பாராட்டினர். அவசர காலத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டதற்காக அவருக்கு பரிசு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.