டில்லி

மொபைல் போன்களின் ப்ரிபேய்ட் திட்டக் காலத்தை 28 நாட்களில் இருந்து 30 நாட்களாக நிர்ணயம் செய்ய டிராய் உத்தரவிட்டுள்ளது.

மொபைல் ப்ரிபேய்ட் திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் என்று இருந்தன.  ஆனால் தற்போது அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 28 நாட்கள் மட்டுமே பிரீபெய்டு காலத்தை நிர்ணயித்து உள்ளன.  இதையொட்டி ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே ப்ரிபேய்ட் வேலிடிட்டி காலத்தை 30 நாட்களுக்கு நீடிக்க வேண்டுமெனப் பயனாளிகள் கடந்த பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.  தற்போது.ப்ரிபேய்ட் காலத் திட்டத்தை 30 நாட்களுக்கு நீடிக்க வேண்டுமென தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய் – Telecom Regulatory Authority of India) உத்தரவிட்டுள்ளது.

இனி திட்ட வவுச்சர்,சிறப்பு டாரிப் வவுச்சர், காம்போ வவுச்சர் ஆகியவற்றில் தலா ஒரு திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்கள் நிர்ணயிக்க வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு ரீசார்ஜ்களின் எண்ணிக்கை 12ஆகக் குறையும் வாய்ப்பு ஏற்பட உள்ளது.