திருவனந்தபுரம்: சபரி மலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்காக நடை திறந்துள்ள நிலையில், அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில்,  அங்கு உயிரிழப்புகளும் இதுவரை இல்லாதவாறு நிகழ்ந்துள்ளது.

மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு 9 நாட்கள் முடிந்த நிலையில், தினசரி ஒரு மரணம் என்ற வகையில் இதுவரை 9 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. அதாவது, கோவிலுக்கு வந்த பக்தர்களில் 9 பேர் திடீர்  மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று  கோவையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அடுத்தடுத்து பக்தர்கள் மரணமடைவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை  கார்த்திகை மாத மண்டல பூசையை முன்னிட்டு கடந்த 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. சீசன் தொடங்கியதை அடுத்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் சபரிமலையில் கூட்டம் அதிகமாகி, அதை சமாளிக்க முடியாமல் கோயில் நிர்வாகம் திணறியது. கேரள உயர்நீதிமன்றமும் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் செயல்பாட்டில் அதிருப்தி தெரிவித்தது. ஸ்பாட் புக்கிங் குளறுபடியால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. இதனால், தரிசன முறையில் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நிலைமை சீரானது.

இதற்கிடையில் கூட்ட நெரிசல் மற்றும் கிளைமேட் காரணமாக, பக்தர்கள்  மூச்சுத்திணறல் அவ்வப்போது மரணம் அடைந்து வருகின்றனர். நடப்பாண்டு கோவில் நடை திறந்து 9 நாட்கள்ஆன நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே 8 பேர் பலியாகி உள்ள நிலையில், நேற்று கோவையைச் சேர்ந்த ஒரு ஐயப்ப பக்தர் உயிரிழந்தார். முரளி என்ற 50 வயதுடையவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சபரிமலை சீசன் தொடங்கிய 9 நாட்களில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியிலும், கோயில் நிர்வாகத்தினரும் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவில் அதிகாரிகள்,  “ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கானோர் சபரிமலைக்கு வருகிறார்கள். இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் ஒவ்வொரு புனித யாத்திரையின்போதும், சராசரியாக, சுமார் 150-க்கும் மேற்பட்ட மாரடைப்பு நிகழ்வுகள் நிகழ்கின்றன. இதன் விளைவாக சுமார் 40-42 பேர் இறக்கின்றனர் என்பதை எங்கள் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்த ஆண்டு, யாத்திரையின் முதல் எட்டு நாட்களில் எட்டு மாரடைப்பு மரணங்களும், நீரில் மூழ்கி மற்றொரு மரணமும் ஏற்பட்டுள்ளன. என்றவர்,  யாத்திரையின் போது ஏற்படும் பெரும்பாலான இருதய நிகழ்வுகள், மக்கள் வேகமாக ஏற முயற்சிக்கும்போது தூண்டப்படுகின்றன. மேலும் அசாதாரண பதற்றம் ஆஞ்சினா அல்லது மாரடைப்பு அல்லது திடீர் அரித்மியா மரணங்களுக்கு வழிவகுக்கும்.

அதனால், இது யாத்திரை மேற்கொள்பவர்கள் தங்கள் மருந்துகளை நிறுத்தக்கூடாது என்றும், மலையேற்றத்தின் போது அதிக ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளதாகவும், கோவில் நிர்வாகம் தரப்பில் சுகாதாரத்துறை தயாராக உள்ளது. இருதய பராமரிப்பு ஐ.சி.யூ வசதிகளைக் கொண்டுள்ளது, இதில் அப்பாச்சிமேடு, நீலிமலை, பம்பா மற்றும் சன்னிதானம் ஆகிய நான்கு இடங்களில் த்ரோம்போலிசிஸ் வசதி உள்ளது. இடையில் 24 அவசர மருத்துவ மையங்கள் உள்ளன. அனைத்தும் AED இயந்திரங்களுடன் இருதயநோய் நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், பொது மருத்துவம், மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் எலும்பியல் நிபுணர்கள் உள்ளிட்ட முழு மருத்துவ குழுக்களும் இங்கு கிடைக்கின்றன. அதனார் யாருக்காவது ஏதாவது உடல்நிலை பாதிப்பு வருவது தெரிய வந்தால்,உடனே  தங்களை நாடினால் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தராக இருக்கிறோம் என்றனர்.

இதுமட்டுமின்றி, இனி வரும் காலங்களில், இதுபோன்ற மரணங்களை தவிர்க்கும வகையில், “புனித யாத்திரைக்கு வருபவர்கள் சமீபத்திய மருத்துவ தகுதிச் சான்றிதழை வழங்க வேண்டும் என்ற கண்டிப்பை அறிமுகப்படுத்துவது குறித்து நாங்கள் தீவிரமாக யோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.