சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ரிசார்ட் ஒன்றில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

வீடுகள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில்  உள்ள செப்டிக் டேங்க் மற்றும் கழிவு நீர் பாதையினுள் இறங்கி சுத்தம் செய்ய எந்த ஒரு தனி நபரையும் நியமிப்பது சட்டவிரோதமானது மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. அதற்காக நவீன இயந்திரங்களும் புழக்கத்தில் உள்ளன. இருந்தாலும்,  கட்டிடங்கள், வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்கு மனிதர்களை பயன்படுத்தும் போக்கு நீடித்து வருகிறது. இதனால், சென்னையில்,  வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி, கட்டிடங்கள், கழிவுநீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், சென்னை அருகே  ஸ்ரீபெரும்பத்தூர் அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளர். சத்தியன் கிராண்ட் ரிசார்ட்டில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியது. கழிவுநீர் தொட்டியில் இருந்து 3 பேரின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது மரணம் ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர்களே பொறுப்பு! சென்னை மாநகராட்சி