சென்னை: சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், அந்த பள்ளியைச் சேர்ந்த வேன் மோதி பள்ளி சிறுவன் உயிரிழந்தான். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வேன் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார்திருநகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது ஸ்ரீவெங்கடேஷ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இங்கு ஆயிரக்கணக்கான மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களை அழைத்து வர பள்ளி நிர்வாகம் வேன்கள் இயக்கி வருகிறது. அதுபோல இன்று காலை மாணாக்கர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று பள்ளி வளாகத்திற்கு வந்து, மாணவர்களை இறக்கிவிட்டுவிட்டு, திரும்புவதற்காக பின்னோக்கி சென்றுள்ளது.
அப்போது, அந்த வேனில் இருந்து இறங்கிச் சென்ற 2ம் வகுப்பு மாணவன், வேனில் மறந்து வைத்துவிட்டுச் சென்ற பொருளை எடுக்கும் வகையில் மீண்டும் வேனை நோக்கி, வேனுக்கு பின்னால் வந்துகொண்டிருந்தார். இதை கவனிக்காத வேன் டிரைவர் வேனை பின்னோக்கி இயக்கியதால், வேன் பள்ளி மாணவன் மீது ஏறியது. இதனால் அந்த சிறுவன் தீக்ஷித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது.
விரைந்து வந்த காவல்துறையினர், வேன் டிரைவர் பூங்காவன் என்பவரை கைது செய்தனர். உயிரிழந்த மாணவன் உடலைக்கைப்பற்றி உடற்கூறு ஆய்வு சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி முதல்வர்மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பள்ளி வளாகத்தின் உள்ளேயே வேன் மோதி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.