சென்னை: போதை பொருட்கள் கடத்தலை தீவிரமாக தடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நடத்திய ஆலோசனையின்போது, போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்கள் நடமாட்டம் சகஜமாக உள்ளது. இதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாக கூகூறி வந்தாலும், அரசியல் கட்சியினரின் பின்புலத்துடன் போதை பொருட்கள் விற்பனை அமோகமாவே நடைபெற்று வருகிறது.  கஞ்சா, பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து ஒவ்வொரு பகுதியிலும் சிலர் விற்பனை செய்து வருகின்றனர். போலீசார் அவ்வப்போது அத்தகைய நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் மீண்டும் மீண்டும் போதை பொருட்கள் நடமாட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே  கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த நீங்கள் நடவடிக்கை எடுத்து வந்தாலும் அது போதாது. இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 11-ந்தேதியை போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக தேர்ந்தெடுத்து உள்ளோம். அதன்படி பள்ளி, கல்லூரிகளில் இது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். அதன்படி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் போதையின் தீமைகள் குறித்த காணொலி காட்சிகளும் பல இடங்களில் காண்பிக்கப்பட்டது

இதையடுத்து, இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கடலோர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும், ஐ.ஜி.க்களும் காணொலி வாயிலாக கூட்டத்தில் இணைந்திருந்த னர்.   இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் முதன்மை செயலாளர் அதுல்யமிஸ்ரா, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மருத்துவ துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை முதன்மை செயலாளர் கன்சோங்கம் ஜடக்சிரு மற்றும் உளவு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவாக பேசினார். தமிழ்நாடு முழுவதும் சோதனை நடத்தி போதைப் பொருள் நடமாட்டத்தை வேரோடு ஒழிக்க பாடுபட வேண்டும். போதைப் பொருள் கடத்தல்காரர்களை கண்டுபிடித்து கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.

முன்னதாக,  காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள் சந்தித்து, கடந்த 11.8.2022 அன்று தமிழ்நாடு அமலாக்கப் பிரிவு சிஐடி சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு மொத்தம் 74,48,367 நபர்கள் கலந்து கொண்டு வேல்ர்டு ரிக்கார்ட்ஸ் யூனியன் (World Records Union) சாதனை படைத்ததற்காக வழங்கப்பட்ட சான்றிதழை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.