சென்னை: மெட்ரோ பணி காரணமாக கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் நாளை முதல் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.
மவுண்ட் பூந்தமல்லி ரோடு X புஹாரி ஹோட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை CMRL பணிகள் நடைபெறுவதால், சோதனை அடிப்படையில் 11.10.2024 முதல் 14.10.2024 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். அதற்கேற்ப உங்கள் பயணத்தைத் திட்டமிட்டு, வழிமுறைகளைப் பின்பற்றவும் என காவல்துறை அறிவித்து உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக கத்திப்பாரா சந்திப்பில் அக்டோபர் 11 முதல் 14-ம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை கத்திப்பாரா சந்திப்பில் அக்டோபர் 11 முதல் 14-ம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது
கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவை வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலையில் நேராக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக அவர்கள் மவுண்ட் பூந்தமல்லி சாலை பெல் இராணுவ சாலை சந்திப்பில் புதியதாக அமைந்துள்ள சாலை வழியாக டிபென்ஸ் காலனி 1-வது அவென்யூவில் (வலதுபுறம் திரும்பி) இலகுரக வாகனங்கள் மட்டும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனை வழியாக பட்ரோடு சென்று அடையலாம்.
மற்ற வாகனங்கள் கண்டோன்மென்ட் சாலையில் இடது புறம் திரும்பி சுந்தர் நகர் 7-வது குறுக்கு தெரு, தனகோட்டி ராஜா தெரு சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தெற்கு பகுதி சாலை வழியாக ஒலிம்பியா 100 அடி சாலை சந்திப்பு அடைந்து வாகனங்கள் கத்திப்பாராவை அடைய வலது புறமாகவும், வடபழனியை அடைய இடது புறமாகவும் தங்கள் இலக்குகளை நோக்கி செல்லலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.