டெல்லி: டெல்லியில் உத்தம் நகரில் ஏற்பட்ட பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் கடத்தப்பட்ட ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதில் முக்கியமான பங்காற்றியிருக்கிறது. ஆம். டிராஃபிக் பலருக்கு இம்சையென்றால், அபூர்வமான நேரங்களில் சிலரின் வாழ்க்கையையே காப்பாற்றி விடுகிறது.
போக்குவரத்து நெரிசலில் பகிர்ந்து கொள்வதற்கு எவருக்கும் ஒரு மகிழ்ச்சியான கதை இருக்கப் போவதில்லை. ஆனால், ரிஜ்வால் அதற்கு விதிவிலக்காகிறார். அந்த மகிழ்ச்சியான கதை அக்டோபர் 18 ஆம் தேதி அவருக்கு நடந்தது.
அக்டோபர் 18 ஆம் தேதி பின்னிரவு ரிஜ்வால் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போது நான்கு பேரால் கடத்தப்படுகிறார். கடத்தல்காரர்கள் துவாரகா நோக்கி காரை செலுத்துகின்றனர். ஆனால், அவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றனர்.
அப்போது நடந்ததைப் பற்றிக் காவல்துறை அதிகாரி கூறும்போது, “இந்த சம்பவம் பற்றி அதிகாலை 2 மணியளவில் தெரிய வந்தது. ஜானக்புரி அருகே ரிஜ்வாலை நான்கு பேர் கடத்தியதாக பாதிக்கப்பட்டவரின் சகோதரர் எங்களுக்குத் தெரிவித்தார். வாகனத்தை எளிதில் அடையாளம் காண உதவுவதற்காக,அதன் விண்ட்ஷீல்டில், “ஹை லேண்டர்” என்ற வார்த்தை இருக்கும் என்றும் அவர் போலீசாரிடம் கூறினார்”, என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: “பி.சி.ஆர் குழு ஒன்று துரத்திச் சென்று காரை உத்தம் நகர் கிராசிங் அருகே கண்டது. அதே நேரத்தில் காரை ஓட்டிய நபர், போக்குவரத்து நெரிசலைக் கடந்து நெஜஃப்கர் சாலையை அடைய முயன்றார்.
நீண்டநேரமாக எந்த முன்னேற்றமும் காண முடியாததால் கடத்தல்காரர்கள் காரை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்ற வேளையில், போலீசார் அவர்களில் ஒருவரை பிடித்ததோடு ரிஜ்வாலையும் மீட்டனர்” என்றார்.