சென்னை: பெரம்பூர், வியாசர்பாடி சுரங்கபாதைகளில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டதால், இன்று காலை முதல் மீண்டும் வழக்கம்போல போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையில் பெய்த இரண்டு நாள் மழையில் வடசென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது. வடசென்னையின் நுழைவு வாயிலாக கருதப்படும் பெரம்பூர் வியாசார்பாடி பகுதிகளில் உள்ள பாலங்கள் மழைநீரால் சூழப்பட்ட நிலையில், கடந்த இரு நாட்களாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பலர் பல கிலோ மீட்ட தூரம் சுற்றி செல்லும் நிலை உருவானது.
இதையடுத்து, அங்கு மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் அகற்றும் பணி தொடர்ந்து வந்து. நேற்று மழை குறைந்த நிலையில், விறுவிறுப்பாக மழைநீர் அகற்றும் பணி தொடங்கியது. இரவில் மழை ஓரளவிற்கு குறைந்த காரணத்தால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் மின் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று வியாசர்பாடி ஜீவா மேம்பாலத்தில் தண்ணீர் இன்னும் முழுமையாக வடியாத காரணத்தினால் அவ்வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. மேலும் அம்பேத்கர் கல்லூரி சாலை புளியந்தோப்பு பகுதியில் தண்ணீர் இருப்பதால் ஜீவா வழியாக செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட அந்த பகுதியில் சிக்காமலிருக்க வியாசர்பாடி ஜீவா மேம்பாலம் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கி உள்ளது. மழைநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டதையடுத்து பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம், வியாசர்பாடி சுந்தரம் மேம்பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.