சென்னை:
மேல்மருவத்தூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளாரின் பேனர்களை கிழிக்க முற்பட்ட டிராஃபிக் ராமசாமியை, பங்காருவின் பக்தர்கள் அடித்து உதைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் பல்வேறு பிரமுகர்களும் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியும் சென்னையில் இருந்து நெடுவாசல் கிளம்பினார். வழியில் மேல்மருவத்தூர் அருகே தனது வாகனத்தை நிறுத்தச் சொன்ன டிராஃபிக் ராமசாமி, அங்கு சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் பிளக்ஸ் பேனர்களை கிழித்தார்.
சட்டத்துக்குப் புறம்பாக வைக்கப்பட்டிருக்கும் இந்த பேனர்களால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
டிராஃபிக் ராமசாமி, பேனர்களை கிழிப்பதைக் கண்ட பங்காரு பக்தர்கள் ஒன்று கூடி, அவரை அடித்து உதைத்தனர். அவருக்கு பாதுகாப்புக்காக வந்திருந்த காவலருக்கும் அடி விழுந்தது. இந்தத் தகவல் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் நிர்வாகத்தினருக்கு தெரியவந்தது. நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் வந்து டிராஃபிக் ராமசாமியையும், பாதுகாவலரையும் மீட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.