ஐதராபாத்:

ந்திர மாநிலம் ஐதராபாத்தில் ஆண்டு தோறும் ஆஸ்துமா நோயை குணப்படுத்தும்  மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி இன்றும் நாளையும்  நடைபெறுவதையொட்டி, அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த பதானி கவுடு என்ற குடும்பம்  சார்பில் 1800ம் ஆண்டு முதல் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக மீன் பிரசாதத்தை வழங்கி வருகின்றனர்.  உயிருள்ள மீனின் வாயில் மருந்தை வைத்து ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி விழுங்க செய்கிறார்கள்.

இப்படி 3 ஆண்டு விழுங்கினால் ஆஸ்துமா நோய் முற்றிலும் குணமாகி விடும் என்பது பலரின் நம்பிக்கையாக இருக்கிறது. அதனால் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆஸ்துமா நோயாளிகள் கலந்து கொண்டு மீன் மருந்தை சாப்பிடுகிறார்கள். சைவம் சாப்பிடுபவர்களுக்கு வெல்லத்தில் வைத்து ஆஸ்துமா மருந்து வழங்கப்படுகிறது.

மீன் மருத்துவ முகாமுக்காக லட்சக்கணக்கான மீன்களை தெலுங்கானா அரசின் மீன் வளத்துறை இலவசமாக வழங்கி வருகிறது.. அதே போல் அரசு துறைகள் சார்பில் குடிநீர் வசதி, பாதுகாப்பு வசதி, பஸ் வசதி போன்றவையும் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் இன்று ஐதராபாத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். சாதாரண அடிமட்ட மக்கள் முதல் விவிஐபி வரை, மீன் பிரசாதம் வாங்க வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் மட்டுமல்லாது கூட்ட நெரிசலில் பலர் சிக்கி படுகாயம் அடையும் நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. இதன் காரணமாக இன்று பல இடங்களில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி என்ற பகுதியில் இன்றும், நாளையும்,  மீன் பிரசாரம் வழங்கும் நிகழ்ச்சி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் வருவோர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி அமைதியாக வந்து மீன் பிரசாதம் பெற்றுச் செல்லும்படியும், காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.