வட சென்னையின் பிரதானமான விழாவாகக் கருதப்படும் திருப்பதி குடை கவுனி தாண்டும் நிகழ்ச்சி நாளை (அக். 2) நடைபெறுகிறது.
அதன் காரணமாக காலை 8 மணி முதல், என்எஸ்சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அருகிலுள்ள தெருக்களில் ஊர்வலம் வால் டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை போக்குவரத்து நிறுத்தப்படும். .
மதியம் 3 மணி முதல் வால் டேக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகள், யானை கவுனி பாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று பெருநகர சென்னை போக்குவரத்துக் காவல் துறை (ஜிசிடிபி) அறிவித்துள்ளது.
சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து இந்த வழியாக செல்பவர்கள், ஈவிஆர் சாலை (பூந்தமல்லி நெடுஞ்சாலை), ராஜாஜி சாலை மற்றும் பேசின் பிரிட்ஜ் சாலை உள்ளிட்ட மாற்று சாலை வழியாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோர்ச்சவ விழா வரும் அக்டோபர் 4 முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் 5வது நாள் நடைபெறும் கருடோற்சவத்தின்போது உற்சவருக்கு முன்னும், பின்னும் எடுத்துச் செல்லப்படும் அலங்கரிக்கப்பட்ட குடைகள் பலநூறு ஆண்டுகளாக சென்னை சௌகார் பேட்டையை ஒட்டியுள்ள, சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் தயாரிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த திருப்பதி குடை நாளை காலை சென்ன கேசவப் பெருமாள் கோயிலிலிருந்து புறப்பட்டு பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயகன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை சுமார் 4 மணியளவில் குடைகள் கவுனி தாண்டும்.
மாலை 4:30 மணியளவில் யானைக் கவுனியைத் தாண்டியதும், நடராஜா திரையரங்கம், சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஸ்ட்ராஹான்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம் வழியாக காசி விஸ்வநாதர் கோயிலைச் சென்றடையும்.
இரவு கோயிலில் தங்கிவிட்டு மறுநாள் அக். 3ம் தேதி அதிகாலையில் புறப்படும் குடை, ஐ.சி.எஃப்., வில்லிவாக்கம், பாடி, அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, பட்டாபிராம், மணவாளன் நகர் வழியாகத் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலை அடையும் குடை ஊர்வலம் அக்டோபர் 7ம் தேதி திருப்பதியைச் சென்றடையும்.
திருப்பதி குடை ஊர்வலத்தின்போது மேற்கூறிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.