சென்னை சாலையில் ஃபார்முலா-4 கார் பந்தயம் நாளை முதல் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தீவுத் திடலைச் சுற்றியுள்ள அண்ணாசாலையின் ஒரு பகுதி, காமராஜர் சாலையின் ஒரு பகுதி, கொடிமரச் சாலை, சிவானந்தா சாலை என 3.7 கி.மீ. தூரம் இந்த ஸ்ட்ரீட் ரேஸ் நடைபெற உள்ளது.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகில் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையில் இருந்து முத்துசாமி பாலம் வரையிலும், அதேபோல் காமராஜர் சாலையில் அண்ணா சதுக்கத்தை அடுத்த நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தவிர, கொடிமரச் சாலை மற்றும் சிவானந்தா சாலையில் இந்த மூன்று நாட்களுக்கும் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் அண்ணா சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக வட சென்னைக்கு செல்பவர்கள் சென்ட்ரல் வழியாக செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெரியார் சிலையில் இருந்து பல்லவன் சாலை சிக்னல் வரை உள்ள ஒருவழிப் பாதை இருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஓமந்தூரார் மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் எந்தவித போக்குவரத்து தடையுமின்றி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காமராஜர் சாலையில் அண்ணா சதுக்கம் மற்றும் தலைமைச் செயலகம் வழியாக செல்லும் வாகனங்கள் உயர்நீதிமன்றம் அருகே வடக்கு கோட்டை சாலை வழியாகவும் அண்ணா சதுக்கம் அருகே காமராஜர் சாலை வழியாகவும் திருப்பி விடப்பட்டு அண்ணா சாலை சென்ட்ரல் வழியாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லும்.

ஆகஸ்ட் 30, 31 மற்றும் செப்டம்பர் 1 என மூன்று நாட்களுக்கு மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த முக்கிய சாலைகளில் ஃபார்முலா-4 கார்கள் அதிக ஒலியுடன் சென்னை நகர கார் பந்தய ரசிகர்களை அறவிட தயாராகி உள்ள நிலையில் இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.