கைலாசா: ஆகஸ்டு 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக அறிவித்துள்ள நித்யானந்தா , தற்போது கைலாசா நாட்டில் வர்த்தகத்திற்கு தங்க நாணயம் வெளியிடப்படும் என்றும், 56 உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்வோம் என்றும் அறிவித்து உள்ளார்.
பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா கடந்த பல மாதங்களாக தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில், கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதத்தில், அவர் தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவடாரில் ஒரு தனித் தீவு வாங்கி, அதைத் தனது தனி நாடாகவும், அதற்கு பெயர் கைலாசா என்றும் அறிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். தமது நாட்டில், ஆன்மீகம், கலாச்சாரம் அகிம்சை ஆகியவை பின்பற்றப் படும் என தெரிவித்திருந்தார். தொடர்ந்து, கைலாசா நாட்டின் கொடியை அறிமுகப்படுத்தியவர், விருப்பம் உள்ளவர்கள் கைலாசா நாட்டில் குடிமக்களாகச் சேரலாம் என்றும் சில மாதங்களுக்கு முன்பு அவர் அறிவித்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் வீடியோ வெளியிட்ட நித்தி, கைலாசா நாட்டிற்கு உரிய கரன்சி நோட்டுகளும் தயாராக இருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு ஒரு கரன்சியும், உள்நாட்டில் ஒரு கரன்சியும் பயன்படுத்தப்பட இருப்பதாகவும், வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து, ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், 300 பக்க பொருளாதார கொள்கை தயாராக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன் விநாயகர் சதுர்த்தி அன்று (ஆகஸ்டு 22) புதிய அறிவிப்புகளை வெளியிடப்போவதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது, தனது கைலாசா நாட்டின் கரன்சியை பற்றி பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், கைலாசா நாட்டின் கரன்சி காஸ்ட்லியானது என்றும், அவை முழுக்க முழுக்க முழுக்கவே பொற்காசுகள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த பொற்காசுகளுக்கு, ஆங்கிலத்தில் டாலர், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா எனவும் அதற்கு பெயர் வைத்திருக்கிறார்.
இந்து மதத்தை பின்பற்றும் 56 இந்து நாடுகளுடன் வர்த்தகம் செய்வோம் என கூறி யுள்ளவர், உள்நாட்டுக்கு ஒரு கரன்சி, வெளிநாட்டுக்கு மற்றொரு வகை கரன்சி என்றும், கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்கள் விநாயகர் சதுர்த்திக்கு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.