சென்னை

வாட்ஸ்அப்  செய்திகளை உருவாக்குவோரைக் கண்டறிய வழி உண்டு என ஐஐடி பேராசிரியர் காமகோடி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப் மூலம் பல பொய்த் தகவல்களும் செய்திகளும் பரப்பப்பட்டு வருகிறது.   இந்த செய்திகளை உருவாக்குவோர் யார் எனக் கண்டறிவது எளிதாக இல்லை.  இதை ஒட்டி சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளெமெண்ட் ரூபின் என்பவர் குற்றவாளிகளைக் கண்டறிய இத்தகைய தள  பதிவர்கள் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும் என வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.   இதன் மூலம் செய்திகளை உருவாக்குவோர் சைபர் கிரைம் மூலம் கண்டறியப்படும் என வழக்கில் தெரிவித்திருந்தார்.

ஆனால் வாட்ஸ்அப் இணைய தளம் யாருடைய சொந்த விவரங்களையும் வெளியிடக் கூடாது என உள்ளதால் இவ்வாறு ஆதார் எண்ணை இணைக்க முடியாது எனவும் அத்துடன்  செய்திகளை உருவாக்குவோரைக் கண்டறிவது எளிதானது அல்ல என தெரிவித்திருந்தது.  மேலும் செய்திகளை உருவாக்குவோரைக் கண்டுபிடிக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தது.

இதை அறிந்த சென்னை ஐஐடி பேராசிரியர் காமகோடி, “வாட்ஸ்அப் நிறுவனம் மூலம் செய்திகள் அனுப்பப்படும் போது தற்போது செய்திகளை அனுப்புவோரின் எண் மட்டும் தெரியும் படி உள்ளது.  நிறுவனம் தனது தொழில்நுட்பத்தைச் சற்றே மாற்றி அமைப்பதன் மூலம் முதலில் அனுப்பப்படும் செய்திகளில் செய்தியை அனுப்புவோரின் எண் டாக் செய்திருக்கும்படி மாற்ற வேண்டும்.

அதாவது ஒரு செய்தியை முதலில் அனுப்புவோரின் எண் அந்த செய்தியுடன் இணைக்கப்பட வேண்டும்.   அதன் பிறகு அந்த செய்தியை யார் பகிர்ந்தாலும் பகிரப்பட்ட செய்தியில் அதை உருவாக்கியோர் எண்  இணைந்திருக்கும்.  இதைக் கொண்டு செய்தியை உருவாக்கியவரைச் சுலபமாகக் கண்டறிய முடியும்” என உயர்நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் ஆகியோரின் அமர்வு இந்த வழக்கை வரும் 31 ஆம் தேதி தள்ளி வைத்துள்ளனர்.  அத்துடன் வாட்ஸ்அப் நிறுவனம் பேராசிரியரின் அறிக்கையை ஏன் செய்யக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.