ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனங்களான சுசூகியும், டொயட்டோவும் இணைந்து கொள்முதல், பசுமை வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் உலகின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்துள்ளதால், இந்தியாவில் சுசூகி நிறுவனம் அதன் சந்தையை மீண்டும் தக்க வைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

டொயட்டோ தொழில்நுட்பத்தில் சிறிய வாகனம், சவுகர்யமான கார்களை சுசூகி தயாரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இரு நிறுவனங்களும் கூட்டாண்மை குறித்து ஆய்வு மேற்கொள்வதாக கடந்த அக்டோபர் மாதத்தில் அறிவித்திருந்தன. தற்போது இந்த கூட்டாண்மை அறிவிப்பை இரு நிறுவனங்களும் இணைந்து செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானின் நான்காவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் சுசூகி. தற்போதுள்ள வேகத்திற்கு ஏற்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளர்ச்சிக்கு போராடுவதாக இந்த நிறுவனம் அறிவித்திருந்தது. இதற்கு டொயட்டோவின் நிதி ஆதாரம், தொழில்நுட்பம் ஆகியவை தற்போது இணைந்திருப்பது சுசூகியின் வளர்ச்சிக்கு உதவும்.

நீண்ட நாட்களாகவே சுசூகி நிறுவனம் கூட்டாண்மைக்கு நிறுவனங்களை எதிர்பார்த்து காத்திருந்தது. வோக்ஸ் வேகன் நிறுவனத்துடன் 2015ம் ஆண்டில் ஏற்பட இருந்த கூட்டாண்மை திடீரென ரத்தானது. 1980ம் ஆண்டு முதல் இந்தியாவில் கால் பதித்து சிறந்த அடித்தளம் இட்டுள்ள சுசூகியின் நெட்ஒர்க் டொயட்டோ நிறுவனத்துக்கு உதவியாக இருக்கும்.

இது குறித்து சுசூகி நிறுவன துணைத் தலைவர் யுசுகிதோ ஹரயாமா கடந்த டிசம்பர் 31ம் தேதி டோக்கியோவில் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ இந்தியாவில் நாங்கள் கற்றுக் கொண்ட அனுபவ பாடத்தை டொயட்டோ நிறுவனம் விரும்பினால் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இந்த கூட்டாண்மை வெற்றி கூட்டாண்மையாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என அவர் தெரிவித்திருந்தார்.
மாருதி சுசூகி நிறுவனத்துடன் சுசூகி நிறுவனம் இந்திய கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது. இந்தியாவில் ஓடும் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட கார்கள் சுசூகி நிறுவனத்தினுடையதாகும். உலகின் 3வது பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக வரும் 2020ம் ஆண்டில் திகழ உள்ள டொயட்டோ நிறுவனம் இந்தியாவில் சுசூகியின் விற்பனையை மிஞ்ச முடியாமல் திணறி வருகிறது.

குறைந்த விலையில் சிறிய கார்களை வழங்கி வரும் சுசூகி நிறுவனத்துடன் டொயட்டோவின் தொழில்நுட்பமும் இணைவதால் இந்திய கார் சந்தை மேலும் கலைகட்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.