விளையாட்டு துப்பாக்கியால் விபரீதம்.. வெறுத்துப்போன போரூர் போலீசார்..
சென்னை ஐயப்பன்தாங்கல் ஆர்.ஆர் நகரில் வசிப்பவர் நாகேந்திரன் (27). இவர் அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் தளத்தில் குடியிருந்து வருகிறார். 2-வது தளத்தில் சாந்தி (42) என்பவர் குடியிருந்து வருகிறார். சாந்திக்கும் நாகேந்திரனுக்கும் குப்பை கொட்டுவதில் தொடங்கி தண்ணீர் பிடிப்பது வரைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த மோதல் சில நேரங்களில் வாய்த் தகராறாகவும் வெடித்து வந்துள்ளது.
சம்பவத்தன்று சாந்தி, தன்னுடைய வீட்டின் குப்பையை 2-வது தளத்திலிருந்து கீழே கொட்டியதாகக் கூறப்படுகிறது. அந்தக் குப்பை முதல் தளத்தில் குடியிருக்கும் நாகேந்திரனின் வீட்டின் வாசலில் விழுந்துள்ளது. அதனால் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சமரசப்படுத்தி வைத்துள்ளனர். சாந்தி தன்னுடைய சகோதரியிடம் அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த தகராற்றைக் கூறியுள்ளார்
உடனே சாந்தியின் சகோதரி நாகேந்திரன் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாகேந்திரன், தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சாந்தியையும் அவரின் சகோதரியையும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து சகோதரிகள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆனாலும் நாகேந்திரன் விடாமல் அவர்களை விரட்டியதோடு மேலே பார்த்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அந்த அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் வெளியில் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனே இதுகுறித்து போரூர் எஸ்ஆர்எம்சி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து போலீஸார் விசாரணை நடத்தியதில், அந்த துப்பாக்கி விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் ரகம் என்றும், இதை நாகேந்திரன் ஆன்லைனில் வாங்கியதும் தெரிய வந்துள்ளது. மேலும் இதில் உண்மையான தோட்டாவைப் பயன்படுத்த முடியாது. இவர் ரப்பர் தோட்டாவைப் பயன்படுத்திச் சுட்டதும் தெரிய வந்துள்ளது. இப்படியெல்லாம் கூட பிரச்சினைகள் வருமா என வெறுத்துப்போய் தலையில் அடித்துக்கொண்ட போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
– லெட்சுமி பிரியா