கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் ஒலி-ஒளிக் காட்சிக் கூடத்தை பராமரித்து, மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரிக்கும் வரும் சுற்றுலாப் பயணிகளை அதிக நாட்கள் தங்கவைக்கும் நோக்கில், அங்கு ஒலி-ஒளி காட்சிக் கூடம் அமைக்க இந்தியச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் திட்டமிட்டது.அதன்படி, கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத்துறை வளாகத்தில் இரண்டு கோடியே 25 லட்சம் செலவில் ஒலி-ஒளிக் காட்சிக் கூடம் அமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்க்கும் வசதியுள்ள இந்தக் காட்சிக் கூடத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள படம் காட்டும் கருவி, புரொஜெக்டர், அதிநவீன லென்ஸ், ஒலிபெருக்கி, அலங்கார மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதில், கன்னியாகுமரி பகவதி அம்மன், தூய அலங்கார உபகார மாதா, சுவாமி விவேகானந்தர், திருவள்ளுவர், குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள் ஆகியவை குறித்து தமிழ், ஆங்கில மொழிகளில் ஒலி-ஒளிக் காட்சிகளாக இடம் பெற்றிருந்தன.

செயல்பாடாமல் இருக்கும் ஒலி ஒளிக் காட்சிக் கூடம்இந்த ஒலி-ஒளிக் காட்சிக் கூடம் பணிகள் அனைத்தும் முடிந்து 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு சில நாட்கள் மட்டுமே அந்த ஒலி-ஒளிக் காட்சிக் கூடம் செயல்பட்டது. அதன் பிறகு அங்குள்ள கணினி, கருவிகள் அனைத்தும் துருபிடித்து, அந்த ஒலி-ஒளிக் காட்சிக் கூடம் செயல்படாமல் முடங்கியது. கடந்த எட்டு வருடங்களாக அந்த ஒளிப்படக் காட்சிக்கூடம் மூடியே கிடப்பதால், அங்கு உள்ள புரொஜெக்டர், படக் கருவிகள் அனைத்தும் கடல் காற்றினால் துருப்பிடித்துக் காணப்படுகிறது.இதனால் மத்திய அரசின் இரண்டு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி சுற்றுலாப் பயணிகளுக்குப் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த ஒலி-ஒளிக் காட்சிக் கூடத்தைப் பராமரித்து மீண்டும் செயல்படவைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் விரும்புகிறார்கள். இதற்குச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.