சென்னை: மாமல்லபுரத்தில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட புராதன சின்னங்களை இரவு 9மணி வரை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு சுற்றுலாத் துறை அறிவித்து உள்ளது. வரும் 15ந்தேதி முதல், இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் உள்ள இடங்களில் மாமல்லபுரம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதை முறையாக பராமரிக்காத நிலையில், சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க பகலில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பத்தோடு பதினொன்றாக இருந்தது. ஆனால், கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரத்தில் சந்தித்தபோது, அந்த ஊரே மின்னொளியில் தகதகவென ஜொலித்தது மேலும் படு சுத்தமாகவும் காணப்பட்டது.. இது உள்நாடு மட்டுமின்றி வெளிநாடு சுற்றுலா பயணகளிடையேயும் பெரும் வரவற்பை பெற்றதுடன் , ‘மாமல்லபுரத்தை கண்டே தீரவேண்டும்’ என்ற எண்ணத்தை அனைவரிடமும் விதைத்துவிட்டது.
பின்னர் சில நாட்களில் வண்ண விளக்குகள் அகற்றப்பட்டன. சுற்றுலாத்தலங்கள் மீண்டும் குப்பை கூளங்களான. அதனால், பொதுமக்கள், மாமல்லபுரத்தை சுத்தமாகவும், வரலாற்று சின்னங்களை அனைவரும் இரவு நேரங்களிலும் கண்டுகளிக்கும் மின்னொளி வசதி ஏற்படுத்தி தந்து அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்ரகையை திமுக அரசு ஏற்று, அதற்கான பணிகளை முடுக்கி விட்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், ஜூலை 15ந்தேதி முதல், இரவு 9 மணிவரை சுற்றுலா பயணிகள், வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் மாமல்லபுரதத்தின் புராதன சின்னங்களை பார்வையிடலாம் என தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மாமல்லபுரத்தில் காணப்படும் பல்லவ கால சிற்பங்கள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற நினைவுச்சின்னங்கள். இதுவரை அங்கு போதுமான அளவு வெளிச்சம் போடப்படாத நிலையில், தற்போது, அவை வண்ண வண்ண விளக்குகளைக் கொண்டு மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. உலகப் புகழ்பெற்ற நினைவுச் சின்னங்களை இரவு நேரமும் பொதுமக்கள் பார்க்கும் வகையில், தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து, நடவடிடக்கை எடுத்துள்ளது.
அதன்படி, அங்குள்ள சிற்பங்களான, கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து, அர்ஜுனனின் தவம், கடற்கரைக் கோயில், ஐந்து ரதங்கள் போன்ற பல்வேறு இடங்களை இரவு 9மணி வரை வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில் சுற்றுலா பயணிகள் கண்டு, பரவசமடைய முடியும்.
தற்போது இந்த பகுதிகளை சுற்றிப்பார்க்க வரும் உள்ளூர் மக்களுக்கு நுழைவுக் கட்டணமாக ரூ 40 மற்றும் வெளிநாட்டினருக்கு ரூ 600 வசூலிக்கப்படுகிறது. இதுவரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாலை 6 மணிக்கு மேல் அந்த இடத்திற்குச் செல்ல பொது மக்கள் தடைசெய்யப்பட்டனர். தற்போது சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ளதால், மீண்டும் இரவு 9 மணி வரை நினைவுச்சின்னங்களை திறந்து வைக்க தொல்லியல் துறை முடிவு செய்து, புராதன நினைவுச் சின்னங்களைச் சுற்றிலும் இரவில் நன்றாகத் தெரியும் வகையில் பல்வேறு வண்ணங்களில் அதிநவீன மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, நினைவுச் சின்னங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.