குருவிளங்காட்:

பாலியல் வன்கொடுமை சம்பவங்களை எதிர்த்துப் போராடுவதால், கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.


கேரளாவின் மையப் பகுதியான கோட்டயத்திலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குருவிளங்காட். ரோமன் கத்தோலிக்கர்கள் அதிகம் வசிக்கும் பகுதி.

2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை இப்பகுதி மக்களை சந்தித்து கோரஸ் பாடல்கள் பாடுவது, உடல் நலம் குன்றியோரை சந்திப்பது, காய்கறித் தோட்டத்தை பராமரிப்பது போன்ற பணிகளில் 6 கன்னியாஸ்திரிகள் ஈடுபட்டு வந்தனர்.

ஜலந்தர் பிஷப் ப்ராங்கோ முலாக்கல் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக, பொறுப்பிலிருந்த மதர் சூப்பீரியரிடம் தெரிவித்தார்.
இதை வெளியே சொல்லக் கூடாது என அந்த கன்னியாஸ்திரியை மிரட்டி அமைதியாக்கினார்.

இந்த கொடுமையை மற்ற 5 கன்னியாஸ்த்திரிகளும் தட்டிக் கேட்டனர். தாங்களே இதற்கு சாட்சி என்றும் அறிவித்தனர்.

தொடர்ந்து போராடி வரும் அவர்கள், எதிர்த்துப் போராடிய தங்களை அவர்கள் துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சகோதரி அனுபமா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு தெரியவந்ததும், தேவாலயத்தின் மூத்தவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். இந்தியாவுக்கான வாட்டிகன் பிரதிநிதிக்கும் எழுதினோம்.

ரோமில் உள்ள கேரளாவின் 3 சிறப்பு பிரதிநிதிகளுக்கும் எழுதினோம். யாருமே எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.
இப்போது தேவாலயத்தில் எங்களை துன்புறுத்துகிறார்கள். ஒவ்வொருவராக வெளியேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

சர்ச்சிலிருந்து வெளியேறுமாறு 5 கன்னியாஸ்த்திரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தினமும் அவமானப்படுத்துகின்றனர்.
மாதாந்திர உதவித் தொகையையும் நிறுத்திவிட்டனர்.

இங்கு கன்னியாஸ்திரியாக இருந்த சகோதரி ஜெஸ்மி எழுதிய சுயசரிதையில், பத்து ஆண்டுகளாகவே இந்த தேவாயலத்தில் பாலியல் கொடுமை நிகழ்ந்து வருகிறது. எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கைது செய்யப்பட்ட ஃபாதர் ராபின் வடக்கும்சேரிக்கு இது முதல் சம்பவம் அல்ல. இதே குற்றத்தை பலமுறை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்களை தொலைவான இடத்துக்கு மாற்றிவிட்டு, பிரச்சினையை முடித்துவிடுகிறார்கள் என்றார்.

இந்த கொடுமைகளைப் பற்றி பேசவே பலரும் பயப்படுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியைவிட கத்தோலிக்க தேவாலயங்கள் வலுவாக இருக்கின்றன.

அனைத்து அரசியல் கட்சியினருடன் தேவாலயங்கள் நட்புடன் உள்ளன. அரசியல்வாதிகள் எல்லாம் இந்த பிரச்சினையில் பாதுகாப்பாக நழுவுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் சென்னிதால கூறும்போது, மத அமைப்பில் நடக்கும் பிரச்சினையில் கருத்து சொல்ல முடியாது என்கிறார்.

இதற்கிடையே, கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கு ஏறக்குறைய முடிந்துவிட்டது. பிஷப் ப்ராங்கோவை கைது செய்யும் முன் போதிய ஆதாரங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். விரைவில் குற்றப்

பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கோட்டயம் எஸ்.பி., ஹரிசங்கர் தெரிவித்துள்ளார்.