பெங்களூரு :
சிகலா மனு குறித்து கர்நாடக உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. சசிகலாவின் விடுதலை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு அவர் வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.

இந்த நிலையில் சசிகலா, இளவரசி ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை கடந்த மாதம்(நவம்பர்) செலுத்தினர். இதையடுத்து நன்னடத்தை அடிப்படையில் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று சசிகலாவின் வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறி வருகிறார். இதுகுறித்து பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் சசிகலாவின் வக்கீல்கள் ஒரு மனுவை வழங்கியுள்ளனர். அந்த மனுவை, போலீஸ் டி.ஜி.பி.க்கு சிறை நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.

விடுமுறை நாட்களை கழித்துவிட்டு சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யலாமா? என்பது குறித்து சட்ட ஆலோசனையை சிறைத்துறை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை சட்ட ஆலோசனை சசிகலாவுக்கு சாதகமாக அமைந்தால், அவர் இந்த மாதத்திலேயே விடுதலை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.