புதுடெல்லி:

கடந்த ஆண்டு புதிதாக 18 கோடீஸ்வரர்களின் பெயர்களை இந்தியா பட்டியலில் சேர்த்துள்ளது. இதன்மூலம் இந்தியாவின் கோட்டீஸ்வரர்களின் எண்ணிக்கை 119-ஆக உயர்ந்துள்ளதாக, ஆக்ஸ்ஃபாம் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்  தெரியவந்துள்ளது.


சுவிஸ் நாட்டில் உள்ள ஸ்கை ரிசார்ட் நகரில் உலக பொருளாதார அமைப்பு நடத்திய 5 நாட்கள் வருடாந்திர கூட்டத்தில், ஆக்ஸ்ஃபார்ம் அமைப்பின் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது:

நாட்டின் ஒரு சதவீத கோடீஸ்வரர்கள் மேலும் 39 சதவீதம் அதிகமாக செல்வந்தர்களாகியுள்ளனர். ஆனால் அடிமட்ட மக்களில் 50 சதவீதத்தினரின் வசதி,வாய்ப்புகள் வெறும் 3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டில் உலக அளவில் உள்ள கோடீஸ்வர்கள், மேலும் 12 சதவீதம் செல்வந்தர்களாக உயர்ந்துள்ளனர். உலக அளவில் ஏழைகளின் வசதி, வாய்ப்புகள் 11 சதவீதத்துக்கும் குறைவாகவே உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஏழைகளின் சதவீதம் மொத்த மக்கள் தொகையிலிருந்து 10 சதவீதம் உள்ளது. அதாவது, 13 கோடியே 60 லட்சம் மக்கள் ஏழ்மையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனை அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் சரி செய்ய வேண்டும்.

சமமற்ற நிலை அதிகரித்துக் கொண்டே போவதால்,வறுமைக்கு எதிரான போராட்டம் வலுவிழந்து போகிறது. இது பொருளாதாரத்தை தகர்த்து எறிவதோடு, உலகம் முழுவதும் உள்ள ஏழைகள் மத்தியில் கோபத் தீயை மூட்டுகிறது.

அடுத்தவேளை உணவு இருக்குமா என்று தெரியாமல், குழந்தைகளுக்கு மருந்துகள் வாங்க முடியாமல்  ஏழைகள் இருக்கும் போது, குறிப்பிட்ட செல்வந்தர்கள் மட்டும் இந்தியாவின் செல்வத்தை பகிர்ந்து கொள்வது ‘தார்மீக தீங்கு’ இழைப்பதே ஆகும்.

இந்தியாவில் இதே நிலை தொடர்ந்தால், நாட்டின் சமூக மற்றும் ஜனநாயக அமைப்புகள் வேறோடு தகர்ந்துவிடும். இந்தியாவில் உள்ள 9 கோடீஸ்வரர்களின் செல்வமும், நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதத்தினரின் செல்வமும் இணையாக உள்ளது.

2018-2022 காலக் கட்டத்தில் தினமும் 70 புதிய பணக்காரர்களை உருவாக்க இந்திய திட்டமிட்டுள்ளது.

இந்த சமமற்ற வீழ்ச்சிப் பொருளாதார சூழலில், பெண்களும், சிறுமிகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர் வாழ்வதற்கும், குழந்தைகளை படிக்க வைப்பதற்கும் வங்கிக் கணக்கில் இருக்கும் ஒரு தொகை பலனளிக்காது.

பெரிய கோடீஸ்வரர்கள் குறைந்த வரியை கட்டி பயன் அடைகின்றனர். ஆனால், சிறுமிகளுக்கு நல்ல கல்வி மறுக்கப்படுகிறது. பிரசவ வசதி இன்றி ஏராளமான பெண்கள் இறக்கும் நிலையும் உள்ளது.

கடந்த ஆண்டு புதிதாக 18 கோடீஸ்வரர்களின் பெயர்களை இந்தியா பட்டியலில் சேர்த்துள்ளது. இதன்மூலம் இந்தியாவின் கோட்டீஸ்வரர்களின் எண்ணிக்கை 119-ஆக உயர்ந்துள்ளது. இவர்களுக்கு சொத்து மதிப்பு 28 லட்சம் கோடியை தாண்டிவிட்டது.

இந்தியாவில் உள்ள பணக்கார குழந்தைகளை ஒப்பிடும்போது, அங்குள்ள ஏழைக் குழந்தைகள் பிறந்தது முதல் இறக்கும் வரை 3 முறை இறக்கிறார்கள்.

இவ்வாறு ஆக்ஸ்ஃபாம் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.