டெல்லி:
பொது பாதுகாப்பு சட்டத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஓமர் அப்துல்லா விடுதலை செய்யக்கோரி, அவரது சகோதரி தாக்கல் செய்த வழக்கில் ஜம்முகாஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5ந்தேதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள தலைவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுவிட்ட நிலை யில், முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, மெகபூபா முக்தி உள்பட சிலர் தொடர்ந்து வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை பொது பாதுகாப்பு சட்டத்தில் அடைந்து வைத்துள்ளதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
சாரா அப்துல்லா பைலட் தாக்கல் செய்திருந்த மனுவில், தனது சகோதரர் கைது செய்யப்பட்டிருப்பது அவரது அரசியலமைப்பு உரிமைகளை கடுமையாக மீறுவதாகவும், “அனைத்து அரசியல் போட்டியாளர்களையும் மூடிமறைக்க ஒரு நிலையான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியின்” ஒரு பகுதியாகும் என்றும் , இது அரசியல் சாசனத்துக்கு எதிரான என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இது ஒரு ஜனநாயக அரசியலுக்கு முற்றிலும் முரணானது மற்றும் இந்திய அரசியலமைப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையில், வழக்கை விசாரிக்கும் அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி எம்.எம்.சந்தானகவுடர் திடீரென விலகினார். இந்த நிலையில் மனுமீதான விசாரணை வேறு அமர்வில் இன்று நடைபெற்றது. விசாரணையைத் தொடர்ந்து, இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
Omar Abdullah | Omar Abdullah Sister | உமர் அப்துல்லா | உமர் அப்துல்லா சகோதரி | உச்ச நீதிமன்றம்