டில்லி:
டோக்கியோ ஒலிம்பிக்ஸ், ஆசிய போட்டிகள், காமன் வெல்த் போட்டிகளுக்கு தயாராகும் தடகள வீரர்களுக்கு மாதம் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் ‘‘ஒலிம்பிக் இலக்கு படை’’ தனது பரிந்துரைகளை கடந்த மாதம் 11ம் தேதி மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.
இதன் அடிப்படையிலேயே தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘‘ஒலிம்பிக் போடியம்’’ திட்டத்தின் கீழ் 152 தடகள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெறவுள்ளனர். இந்த நிதியுதவி செப்டம்பர் 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.
இந்த நிதியுதவியோடு தடகள வீரர்களுக்கு பயிற்சி மற்றும் போட்டி வெளிப்பாடு போன்றவை வல்லுனர்கள் கொண்டு அளிக்கப்படும். வீரர்கள் போட்டிக்கு தயாராவதற்கு மேற்கொண்டு தேவைப்படும் உதவிகளும் செய்யப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.