டெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியின் நீதிமன்றக்காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து, கிரெட்டா தன்பெர்க் வாசகங்கள் கொண்ட டூல்கிட்டை பகிர்ந்த பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் திஷா ரவியை டெல்லி காவல்துறையினர் கடந்த வாரம் கைது செய்தனர். திஷா ரவி மீது சதி மற்றும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திஷா ரவியின் கைதுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கில், திஷா ரவியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட டெல்லி நீதிமன்றம், திஷா ரவியை, அவரது தாயார் மற்றும் உறவினர்களுடன் பேச அனுமதி வழங்கியதுடன், உடைகள், முகக்கவசங்கள், புத்தகங்களை பெற்றுக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது.
இதற்கிடையில், திஷா ரவி கைது விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த டெல்லி மகளிர் ஆணையம் அம்மாநில போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில்,சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் திஷா ரவி விவகாரத்தில் உரிய சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில், திஷா ரவி இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தட்டார். விசாரணையின்போது, வழக்கு தொடர்பான ஆதாரங்களை சீர்குலைக்க வாய்ப்பு உள்ளதால் திஷா ரவிக்கு எதிரான நீதிமன்றக்காவலை நீட்டிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறை தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, திஷா ரவியின் நீதிமன்றக் காவலை மேலும் 3 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டது.