சென்னை: மறைந்த மக்கள் தலைவர் வாழப்பாடியார் 20வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது சிலைக்கு மரியாதை செலுத்த காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் வாழப்பாடி இராம.சுகந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கே.ராமமூர்த்தியின் 20வது ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை ஆர்.ஏ.புரம் ராஜீவ் பவனில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர். அதுபோல, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திலும் நாளை நினைவேந்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி, வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன்களான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மற்றும் மாநில துணைத்தலைவர் இராம சுகந்தன், அகில இந்திய கிராம தொழிலாளர் சம்மேளன நிர்வாகி இராம கர்ணன் ஆகியோர், சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ராஜீவ் பவன் வளாகத்தில் அமைந்துள்ள வாழப்பாடியாரின் நினைவை போற்றும் வகையில், காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், தோழர்கள் வருகை தந்து அவரது நினைவைப் போற்ற அன்புடன் அழைக்கிறோம் என்று தெரிவித்து உள்ளனர்.