டில்லி
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு நாளை சந்தித்து விநியோகம் மற்றும் தடுப்பூசி தேர்வு குறித்து விவாதிக்க உள்ளது.
அகில உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை சுமார் 22.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் சுமார் 45000க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இதனால் இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி அத்தியாவசியமான ஒன்றாகி உள்ளது. தற்போது ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணி வெற்றிகரமாக நடந்து வருகிறது.
இந்தியா ஒரு பரந்த நாடு என்பதால் மத்திய அரசு கொரொனா தடுப்பூசி பங்கீடு குறித்து முடிவு செய்யக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழு நிதி அயோக் அமைப்பை சேர்ந்த வி கே பால் தலைமையில் இயங்கி வருகிறது. இந்தக் குழு நாளை டில்லியில் கூட உள்ளது. இந்த சந்திப்பில் மாநில அரசுகளின் பிரதிநிதிகள், மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளர்கள் ஆகியோரும் கலந்துக் கொள்கின்றனர்
இந்த கூட்டத்தில் இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய தடுப்பூசி அல்லது தடுப்பூசிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. அத்துடன் இந்த தடுப்பூசிகள் வாங்கத் தேவையான நிதி ஆதாரம் குறித்தும் விவாதிக்க உள்ளது. இந்த தடுப்பூசிக் கொள்முதலுக்குப் பல லட்சம் கோடி ரூபாய்கள் தேவைப்படும் என கூறப்படுகிறது மற்றும் தடுப்பூசி பங்கீடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
கடந்த வெள்ளியன்று அமைக்கப்பட்ட இந்த உயர்மட்டக் குழுவில் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா, மேலும் வெளியுறவுத் துறை, பயோ டெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம், ஆகிய அமைச்சக பிரதிநிதிகள், சுகாதாரத்துறை இயக்குநர், ஐசிஎம்ஆர் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.