சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று காகிதமில்லா நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையடுத்து, வரும் 24ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறம் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்து உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 18ந்தேதி) தொடங்கியது. முதல்நாள் அமர்வான இன்று 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜ் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுகுழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை சபாநாயகர் அறிவித்தார்.
பட்ஜெட் உரை நிறைவையடுத்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பேரவைத் தலைவர் அப்பாவு நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி வரை பேரவை ஒத்திவைக்கப்படுவ தாக அறிவித்தார்.
நாளைய தினம் பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது என்றும், வரும் 24ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்றும் கூறியவர், மார்ச் 21, 22, 23ஆம் தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது என்றார்.
மார்ச் 24ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்துக்கு முதல்வர் பதிலுரையாற்ற உள்ளார். மார்ச் 24ஆம் தேதி கேள்வி – பதில் கிடையாது. மற்ற நாள்களில் இடம்பெறும். அவை நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் பேரவை தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.