சென்னை

மிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைவதால் அதுகுறித்து நாளை முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைகின்றன.  கடந்த சில தினங்களாகத் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மேலும் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.  இவற்றைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தமிழகத்தில் தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் தினமும் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  நாளையுடன் ஊரடங்கு நிறைவடைவதால் முதல்வர் மு க ஸ்டாலின் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக நாளை மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.நாளை 11 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் நடக்கும்  இந்தக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர், பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர், மருத்துவக்கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.