நாளை திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்  நடைபெறுகிறது. இதன் காரணமாக திருவாரூர் பக்தர்களின் வெள்ளத்தால் களைகட்டி உள்ளது.

தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள பிரபலமான தியாகராஜர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் தேர்த் திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். இங்குள்ள தேர் வரலாற்று புகழ் பெற்றது. ஆசியாவிலேயே 2வது உயரமான தேர் என்ற பெருமைக்குரியது. அழகுக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது  திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேர்.

96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்ட திருவாரூர் தேர் நான்கு நிலைகளை கொண்டது. தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை .

இந்த தேரின் நான்காவது நிலையில்தான்  தியாகராஜ சுவாமி வீற்றிருப்பார். இந்த பீடம் மட்டுமே31 அடி உயரமும், 31 அடி அகலமும் கொண்டது. மூங்கில்களை கொண்டு முழுமையாக அலங்கரிக்கப்படும்போது, தேரின் உயரம் 96 அடியாக இருக்கும். ஆழித்தேரின் எடை 300 டன்.

இந்த தேரை அலங்கரிக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.  தேரை அலங் கரிக்க அதிக அளவில் மூங்கில் கம்பங்களும், 3,000 மீட்டர் அளவுக்கு தேர் சீலைகளும் பயன் படுத்தப்படுகின்றன. தேரின் மேற்புறத்தில் 1 மீட்டர் உயரத்திலான கலசம் பொருத்தப்பட்டிருக்கும்.

ஆழித் தேர் நான்கு நிலைகளையும், பூதப்பார், சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம் பீடம் என 7 அடுக்குகளை கொண்டது.

காகிதக் கூழில் தயாரிக்கப்பட்ட பிரம்மா தேரோட்டி பொம்மையும், நான்கு வேதங்களை முன்னிறுத்தும் பெரிய குதிரை பொம்மைகளும் என ஏராளமான பொம்மைகள் பொருத்தப் பட்டிருக்கும்.

தேரை அலங்கரிக்கும்போது, 500 கிலோ எடையுடைய துணிகள், 50 டன் எடையுடை கயிறுகள், 5 டன் பனமர கட்டைகளை பயன்படுத்தப்படுகிறது.

திருவாரூர் தேரின் முன்புறத்தில் 4 பெரிய வடக் கயிறுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஒரு வடக் கயிறு 21 அங்குலம் சுற்றளவும் 425 அடி நீளம் கொண்டதாக இருக்கும். இந்த தேர் தற்போது நவீன யுகத்திற்கு ஏற்ப 4 புல்டோசர்கள் கொண்டு இழுக்கப்பட்டு ஒரே நாளில் நிலைக்கு கொண்டு வரப்படுகிறது.

பல கலை நயந்துடன் கூடிய வேலைபாடுகள் உடைய இந்த தேர் ஹைட்ராலிக்  பிரேக் மூலமே  நிறுத்தப்படுகிறது. திருச்சியிலுள்ள பிஎச்எல் (bhel)  நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இரும்பு அச்சு மற்றும் ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டு அதன் மூலமே தேர்தல் நிறுத்தப்படுகிறது.

புகழ்பெற்ற இந்த ஆழித்தேரோட்டம் நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே மூலவர் தேர்தலில் அமர்ந்துவிட்ட நிலையில் தேர் அலங்கரிக்கும் பணியும் முவடைந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் தேரில் ஏறி மூலவரை தரிசித்து வருகின்ற னர்.

நாளை ஆழித்தேரோட்டத்தைக் காண திருவாரூரில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பாதுகாப்பு பணியிலும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. பல இடங்களில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது.