தூத்துக்குடி: தேவர் ஜெயந்தி, சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் நாளை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை உள்பட மாநிலம் முழுவதும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தேவர் சிலைகளுக்கு சமூதாய மக்களும், அரசியல் கட்சியினரும் மரியாதை செய்வது வழக்கம். மேலும், பல ஊர்களில் இருந்து, தேவர் சமாதி அமைந்துள்ள பசும்பொன்னுக்கு வருகை தந்து, மரியாதை செய்யும் நிகழ்வும் நடைபெறுகிறது. இதையொட்டி ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் பசும்பொன் வருவது வாடிக்கை. இதன் காரணமாக, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்பட சில மாவட்டங்கள் மற்றும் தேவர் குருபூஜைக்கு வரும் வழிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் தூத்தக்குடி மாவட்டத்திலும் நாளை டாஸ்மாக் மூட உத்தரவிட்டு உள்ளது. நாளை   திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா வின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. இதனையொட்டியும், தேவர் ஜெயந்தியை ஒட்டியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபானக் கடைகளும், மதுபானக் கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும்,  மது பானம் விற்பனை, மது பானத்தை கடத்துதல், அவற்றை பதுக்கி வைத்தல் போன்றவை கண்டறியப்ட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரித்துள்ளார்.